புதுச்சேரியில் ஆட்சியமைச்சா மட்டும் போதாது; மொத்த முப்பதையும் தூக்கணும்! பிரதமர் மோடி, அமித் ஷா மீண்டும் வருகை

By karthikeyan VFirst Published Mar 16, 2021, 8:10 PM IST
Highlights

புதுச்சேரியில் பாஜக - அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டாலும் கூட, மொத்த தொகுதிகளையும் கொத்தாக வெல்வதில் தீவிரமாக இருக்கும் பிரதமர் மோடி, உள்துறை அமித் ஷா ஆகிய இருவரும் புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்ள மீண்டும் வரவுள்ளனர்.
 

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. புதுச்சேரியில் ஆட்சியமைக்கும் தீவிரத்தில், கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே புதுச்சேரியில் தீவிர களப்பணியாற்றிவருகிறது பாஜக. 

இந்நிலையில், இந்த சட்டமன்ற தேர்தலை பாஜக, அதிமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணியமைத்து வலுவான கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்கிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் இழந்துவிட்ட நிலையில், பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதை உறுதி செய்துள்ளது சர்வே.

ஏசியாநெட் நியூஸ் மற்றும் சி ஃபோர் நிறுவனம் இணைந்து புதுச்சேரியில் மார்ச் 5 முதல் 12 வரை 5077 வாக்காளர்களிடம் பல்வேறு கேள்விகளுடன் கருத்து கேட்டது. அந்த கருத்து கணிப்பில், 52% பேர் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 36% பேர் மட்டுமே திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம், 23-27 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்கும் என்று சர்வே தெரிவிக்கிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி வெறும் 3-7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று சர்வே தெரிவிக்கிறது.

பாஜக புதுச்சேரியில் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டாலும், புதுச்சேரியின் மொத்த 30 தொகுதிகளையும் வென்று ஆட்சியமைக்கும் முனைப்பில் உள்ளது பாஜக. அந்தவகையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மீண்டும் பிரச்சாரத்திற்காக புதுச்சேரி வருகின்றனர்.

பிரதமர் மோடி, கடந்த முறை புதுச்சேரி வந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்து, முடிவடைந்த நலத்திட்டங்களை திறந்துவைத்துவிட்டு சென்றார். பிரதமர் மோடியின் அந்த வருகைக்கே புதுச்சேரி மக்களிடத்தில் பெரும் வரவேற்பு இருந்த நிலையில், பிரதமர் மோடி மீண்டும் புதுச்சேரி வருகிறார்.

புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக மார்ச் 30 அல்லது 31ம் தேதி பிரதமர் மோடி புதுச்சேரி வருவார் என தகவல் வெளியாகியுள்ளது. உள்துறை அமித் ஷாவும் பிரச்சாரத்திற்கு புதுச்சேரி வரவிருப்பதை பாஜக புதுச்சேரி தேர்தல் மேலிட பொறுப்பாளர்கள் தெரியப்படுத்தியிருந்த நிலையில், அமித் ஷா வருகை தரும் தேதி உறுதியாக தெரியவில்லை.
 

click me!