முதல்வரின் தாயாரையே இழிவுபடுத்தி பேசுவதா? ... திமுக, காங்கிரஸை நேரடியாக எச்சரித்த பிரதமர் மோடி!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 30, 2021, 2:32 PM IST
Highlights

முதல்வரின் தாயாரை அவர்கள் இழிவாக பேசி இருக்கிறார்கள். ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழகத்தினுடைய பெண்கள் நிலைமையை சற்று யோசித்து பாருங்கள்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் எம்.பி. ஆ.ராசா தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், திமுக தலைவர் ஸ்டாலினையும் ஒப்பிட்டு பேசியது மிகப்பெரிய சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.அதாவது ஸ்டாலின் முறைப்படியாக திருமணம் நடந்து 300 நாட்களுக்கு பிறகு பிறந்த  குழந்தை, ஆனால் எடப்பாடி பழனிசாமியோ கள்ள உறவில் பிறந்த குழந்தை என மிகவும் கீழ்தரமாக விமர்சித்தார். 

இதனால் தமிழகமே கொந்தளித்து போன நிலையில், முதலமைச்சர் பழனிசாமி என் தாயைப் பற்றி இப்படி இழிவாக பேசுவதா? என கண்ணீர் மல்க பேசினார். முதல்வரின் பேச்சைக் கேட்டு தான் வருத்தப்பட்டதாகவும், முதல்வருக்கும், அவரது கட்சி காரர்களுக்கும், நடுநிலையாளர்களுக்கும் நான் மீண்டும் குறிப்பிட விரும்புவது, எனது பேச்சு இரண்டு தலைவர்களை பற்றிய தனி மனித விமர்சனம் இல்லை. பொது வாழ்வில் உள்ள இரண்டு அரசியல் ஆளுமை குறித்த மதிப்பிடும் மற்றும் ஒப்பிடும் தான். முதல்வர் பழனிசாமி காயப்பட்டு கலங்கியதற்காக எனது மனம் திறந்த மன்னிப்பை தெரிவிக்கும் அதே வேலையில் ஒரு கருத்தை வலியுறுத்த விரும்புகிறேன் என்றும் பெயரளவில் மன்னிப்புகோரியிருந்தார். 

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்  தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் 13 பேரை அறிமுகம் செய்து வைத்து பொதுகூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி:  ஒருபுறம் தேசிய ஜனநாயக கூட்டணி வளர்ச்சிக்கான திட்டங்கள் முன்வைக்கிறது இன்னொருபுறம் திமுக-காங்கிரஸ் கூட்டணி அவர்களுடைய குடும்ப வாரிசு அரசியல் திட்டத்தை உங்கள் முன்பாக வைத்திருக்கிறார்கள். அந்தக் காட்சியில் கூட்டணியில் உள்ள தலைவர்களுடைய  பேச்சுக்களில் மற்றவர்களை அவமானப்படுத்துவதாக இருக்கிறது. இப்போது காங்கிரஸ் மற்றும் திமுக புதிதாக ஒரு ஏவுகணை தாக்குதலை துவங்கி இருக்கிறது  2ஜி என்ற அந்த ஏவுகணை பெண்களை இழிவு படுத்துவதற்காக ஏவப்படுகிறது. நான் திமுகவுக்கும் காங்கிரசுக்கும் சொல்கிறேன், உங்கள் தலைவர்களை நீங்கள் கட்டுப்படுத்துங்கள்.  

முதல்வரின் தாயாரை அவர்கள் இழிவாக பேசி இருக்கிறார்கள். ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழகத்தினுடைய பெண்கள் நிலைமையை சற்று யோசித்து பாருங்கள். லியோனி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார். ஆனால் திமுக தலைமை அதை தடுக்கவில்லை. தமிழக மக்கள் உங்கள் பேச்சுக்களை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.  மக்கள் அனைவரும் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் திமுகவின் பட்டத்து இளவரசருக்காக பல மூத்த அரசியல் தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு உள்ளனர் என சகட்டுமேனிக்கு திமுகவை வெளுத்து வாங்கினார்.

click me!