சுயசார்புதான் இன்றைய காலத்தின் தேவை... தேசியக் கொடியை ஏற்றிவைத்து பிரதமர் மோடி சுதந்திர தின உரை!

By Asianet TamilFirst Published Aug 15, 2020, 8:31 AM IST
Highlights

சுயசார்பு என்பதுதான் இன்றைய காலகட்டத்தின் தேவை என்று பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசினார். 

நாட்டின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திரமோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கொரொனா வைரஸ் தொற்று காரணமாக வழக்கமான அணிவகுப்புகள், கண்கவர் நிகழ்ச்சிகள் இன்றி சுதந்திர தினக் கொண்டாட்டம் நடைபெற்றுவருகிறது. தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிறகு பிரதமர் மோடி சுதந்திர தின உரையைப் பேசத் தொடங்கினார்.
 “நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  இந்த நேரத்தில் நாட்டின் சுதந்திரத்துக்கு உயிர் நீத்தவர்களுக்கு தலை வணங்குகிறேன். கொரோனாவுக்கான போரில் உயிர் நீத்தவர்களுக்கும் மரியாதை செலுத்துவோம். இன்று கொரோனாவுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் போராடிவருகின்றன. கடந்த காலங்களில் மழை, வெள்ளம் என எத்தனையோ சவால்களை வென்றுள்ளோம். அதேபோல மக்களின் சகிப்புத்தன்மையாலும் மன உறுதியாளும் கொரோனாவை நாம் நிச்சயம் வெல்வோம். இந்தியா தன்னம்பிக்கையுடன் கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறது.
இன்று உலக நாடுகள் அனைத்துக்கும் இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது. பல்வேறு சவால்களுக்கு உடையே நாம் முன்னேறி வருகிறோம். சில நேரம் சவால்கள் நமக்கு புதிய வாய்ப்புகளை திறந்துவிடும். கொரோனா வைரஸ் தொற்று வந்த பிறகு உலக நாடுகள் உதவாத நிலையில் பிபிஇ உடைகளை நாமே தயாரித்தோம். இன்று நாம் புதிய குறிக்கோளை முன்வைத்து அதை நோக்கி பயணிக்க வேண்டும். சுயசார்பு என்பதுதான் இன்றைய காலகட்டத்தின் தேவை. 
வருங்காலங்களில் இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகப்படுத்த வேண்டும். நம்மை உலக நாடுகள் எல்லாம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கின்றன. இந்திய வணிகத்தின் மீதும் உலக நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளன. இந்திய தயாரிப்புகளை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும். இளைஞர்களின் சக்தியால் இந்தியா வளர்ச்சி அடையும்.” என்று பிரதமர் மோடி பேசினார்.

click me!