PM MODI: திரும்ப, திரும்ப சொல்லணுமா..? ஒழுங்கா பார்லிமெண்டுக்கு வாங்க…! எம்பிக்களிடம் சீறிய பிரதமர் மோடி

By manimegalai aFirst Published Dec 7, 2021, 9:30 PM IST
Highlights

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பாஜக எம்பிக்கள் தவறாது வரவேண்டும் என்று பிரதமர் மோடி கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

டெல்லி:  நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பாஜக எம்பிக்கள் தவறாது வரவேண்டும் என்று பிரதமர் மோடி கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

தற்போது நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் முக்கியமான சில கட்சிகளின் எம்பிக்கள் கலந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில் பாஜக எம்பிக்களும் உள்ளனர் என்ற பேச்சுகளும் பரவலாக எழுந்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் விவசாயிகள் உயிரிழப்பு, 12 எம்பிக்கள் சஸ்பென்ட் உள்ளிட்ட சவால்களை நாடாளுமன்றத்தில் பாஜக சந்தித்து கொண்டு இருக்கிறது.

இந் நிலையில் பாஜகவின் நாடாளுமன்ற கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் தான் இந்த கூட்டம் நடந்தது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கூறிய விஷயங்கள் தான் இப்போது பாஜக மேல்மட்டத்திலும், எம்பிக்கள் மத்தியிலும் பேசு பொருளாகி இருக்கிறது.

அவர் பேசியிருப்பது இதுதான்: நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு தயவு செய்து பாஜக எம்பிக்கள் வாருங்கள். நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும், கட்சி கூட்டங்களில் தவறாது கலந்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு சொல்வது போல கூறிக் கொண்டே இருக்க முடியாது. உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளாவிட்டால் மாற்றங்கள் கட்டாயம் நடக்கும் என்று கர்ஜித்துள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சு பாஜக எம்பிக்களை உலுக்கியிருப்பதாகவே கூறப்படுகிறது. இது குறித்து எம்பிக்கள் வட்டாரத்தில் சில தகவல்கள் உலா வருகின்றன.

பிரதமர் மோடியின் எச்சரிக்கை குறித்து அவர்கள் கூறி இருப்பதாவது: பாஜக எம்பிக்கள் அனைவரும் அவரவர் தொகுதியில் சென்று மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார். மேலும் அரசின் திட்டங்களை மக்களிடம் நேரடியாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் நினைக்கிறார்.

ஆனால் நாடாளுமன்றத்தில் சொந்த கட்சி எம்எல்ஏக்கள் முக்கியமான தருணங்களில் அவையில் இல்லாமல் இருப்பதும், விவாதங்களில் கலந்து கொள்ளாமல் இருப்பதும் நடந்திருக்கிறது. இதையறிந்து தான் பிரதமர் மோடி கண்டித்து உள்ளார் என்றும் இனியும் இப்படியே இருந்தால் கட்டாயம் நடவடிக்கை உண்டு என்பதை தான் பளிச்சென்று கூறி இருக்கிறார் என்றும் தெரிவிக்கின்றனர்.

click me!