
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார் பிரதமர் மோடி. அவரை விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தினத்தந்தி நாளிதழின் 75 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டும், பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரி டிவி சோமநாதன் மகள் திருமண நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள இன்று காலை சென்னை வந்தார் பிரதமர் மோடி. அவரை ஆளுநர் வரவேற்றார்.
இதற்காக காலையில் சென்னை விமான நிலையத்துக்குச் சென்றிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும், பாஜக.,வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்டோரும் பிரதமரை விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றனர்.
பிரதமரின் திடீர் நிகழ்ச்சியாக, திமுக., தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்கிறார் மோடி. அண்மைக் காலமாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, தனது வீட்டிலேயே இருக்கிறார் கருணாநிதி. வெளி நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்காமல் உள்ள அவரை தமிழக அரசியல் தலைவர்கள் சென்று சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னைக்கு வரும் மோடி, தனது இன்னொரு திட்டமாக, முதல்முறையாக கோபாலபுரத்துக்கும் நண்பகல் 12.30க்கு வந்து, கருணாநிதியை நலம் விசாரிக்கிறார்.