
உடல் நலம் குன்றியிருக்கும் திமுக., தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார் பிரதமர் மோடி. இந்தத் தகவலை பாஜக.,வின் தமிழக பொறுப்பாளர் முரளீதர் ராவ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தினத்தந்தி நாளிதழின் 75 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டும், பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரி டிவி சோமநாதன் மகள் திருமண நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி. இன்று காலை 10 மணிக்கு வரும் பிரதமர் மோடி, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் 10.30 முதல் 11.30 வரை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன் பின்னர் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் அரங்கில் 11.30 முதல் 12 மணி வரை திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதை அடுத்து பகல் 12.45க்கு அவர் தில்லிக்கு திரும்புவார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை பாஜக., தமிழக பொறுப்பாளர் முரளீதர்ராவ் தனது டிவிட்டர் பதிவில், பிரதமர் மோடியின் இன்றைய தமிழக வருகையின் போது, தமிழகத்தின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்கச் செல்வார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை அடுத்து, இன்று காலை 9 மணி அளவிலேயே விமானநிலையம் வந்தார் மோடி. தனது திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, நண்பகல் 12.30 மணி அளவில் கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்திப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மோடியின் பயணத் திட்டத்தில், திட்டமிடப்படாத திடீர் மாற்றம்.
திமுக., முன்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. அப்போது, பிரதமர் வாஜ்பாய்க்கும் திமுக., தலைவர் கருணாநிதிக்கும் நல்ல புரிந்துணர்வு இருந்தது. அரசியல் கொள்கைகளைக் கடந்து, வேறுபாடுகளைக் கடந்து இருவரும் நெருக்கம் காட்டினர். சூரியனைக் கண்டதும் தாமரை மலரும் என்றெல்லாம் கருணாநிதி அப்போது கூறியிருந்தார். வாஜ்பாய் நல்ல கவிஞர், நான் கலைஞர்... இருவரும் நட்புடன் இருப்பதில் வியப்பென்ன என்றும் இயங்கியவர் கருணாநிதி. எதிர்க்கட்சியாக இருந்த நேரங்களில் பண்டாரங்களின் கூடாரம் என்று பாஜக,வை விமர்சித்த போதும், வாஜ்பாயுடன் தோழைமை பாராட்டினார்.
இருப்பினும் பின்னர் மத்திய பாஜக.,வுடன் விரோதப் போக்கே நீடித்தது. இந்நிலையில், தமிழகத்தின் தவிர்க்க முடியாத மூத்த தலைவராகத் திகழும் கருணாநிதியுடன் தற்போதைய பாஜக., தலைமை அவ்வளவாக நெருக்கம் காட்டவில்லை. அதிமுக.,வுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பாஜக., திமுக.,வை பின்னர் ஒதுக்கியே வைத்திருந்தது. அதற்கு ஊழல் இமேஜ், கொள்கை முரண்பாடுகள் என்றெல்லாம் காரணம் கூறப்பட்டது. இருப்பினும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் தோழமை கொண்டிருந்த அளவுக்கு கருணாநிதி பக்கம் ஆர்வம் காட்டாதிருந்த பிரதமர் மோடி, இப்போது திடீரென அவரை சந்தித்து உடல் நலம் விசாரிக்க உள்ளார் என்பது யாருமே எதிர்பார்க்காத செய்தி.
முன்னர் ஜெயலலிதா இல்லத்தில் வந்து உணவு அருந்த வந்த பிரதமர் மோடி, பின்னர் திடீரென தனது நண்பர் சோ ராமசாமியை சந்தித்து நலம் விசாரித்தார். அதுபோல், இன்று வேறு பணிகளை வைத்து வரும் மோடி, திடீரென கருணாநிதியை சந்திக்க வுள்ளது, அவரது இமேஜை தமிழகத்தில் நிச்சயம் உயர்த்தும் என்று கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.