
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கா? அல்லது டி.டி.வி.தினகரன் அணிக்கா? என்பது தொடர்பாக இன்று 6 ஆவது கட்டமாக விசாரணை நடைபெறவுள்ளது. இந்த விசாரணை அடுத்து இன்று இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் கமிஷனால் முடக்கிவைக்கப்பட்டு உள்ள அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது குறித்து முடிவு எடுப்பதற்காக தேர்தல் கமிஷனில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெறுவது தொடர்பாக ஒருங்கிணைந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கும், சசிகலா அணியினருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் ஏ.கே.ஜோதி முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணை 5 கட்டங்களை நிறைவு செய்துள்ளது.
கடந்த 1–ந் தேதி நடந்த 5–ம் கட்ட விசாரணையின் போது, இரு அணியினரின் வக்கீல்களும், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து கடுமையாக வாதாடினர்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் 6–ம் கட்ட விசாரணை இன்று டெல்லி தேர்தல் ஆணையத்தில் நடைபெறவுள்ளது. இரு தரப்பு வழக்கறிஞர்களும் இன்று ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்கின்றனர்.
இந்த 6 ஆம் கட்ட விசாரணையை அடுத்து இன்று தேர்தல் ஆணையம் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.