
நடிகர் கமலஹாசனுக்கு வரும் நவ.7 ஆம் தேதி பிறந்த நாள். வழக்கம் போல் ரசிகர்களுடன் பிறந்த நாளைக் கொண்டாடுவார் கமல். பல முறை இவர் பிறந்த நாளைக் கொண்டாடும் போதெல்லாம் ஏதாவது கருத்து சொல்வார். ஆனால், அது ஊடகங்களில் பெரும் பரபரப்பையோ கவனிப்பையோ பெற்றதில்லை. ஆனால், இந்த முறை அவர் பிறந்த நாள் குறித்த செய்தியே கூட ஊடகங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் செய்தியாக மாறிவிட்டது. காரணம் இதுவரை கமல் சொன்னது எல்லாம் ஏதோ உளறல்கள் என்று எடுத்துக் கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் இப்போது அவை அரசியலுக்கான அச்சாரமாகவே பார்க்கப்பட்டு வருகின்றன. அதனால்தான் இந்த பிறந்த நாள் செய்தியும் கூட பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் நவ.7ம் தேதி கமலஹாசனுக்கு 63வது பிறந்த நாள் வருகிறது. அத்துடன் அவரது ரசிகர் நற்பணி மன்றத்துக்கு 39 ஆவது ஆண்டாகவும் அமைந்துள்ளது. இந்த இரண்டையும் கொண்டாடும் விதமாக, தனது அரசியல் பிரவேசம் உறுதி என்று கூறியுள்ள கமல்ஹாசன், தனது அரசியல் கட்சி துவக்கம் மிக அமைதியான முறையில் படிப்படியாக நடக்கும் என்று கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இன்று சென்னையில் நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்பில் நடிகர் கமல் பல்வேறு கருத்துக்களைப் பேசினார். அப்போதுதான் கட்சி அரசியல் குறித்தும், தாம் தொடங்கப் போகும் அரசியல் கட்சிக்கு தேவையான நிதி திரட்டுவது குறித்தும் கருத்துகளை வெளிப்படுத்தினார்.
அப்போதுதான், அரசியல் கட்சிக்கான முதல் படியாக, மொபைல் ஆப் ஒன்று நவ.7ம் தேதி துவங்கப்படும் என்றார். அந்த ஆப் மூலம், நற்பணி மன்றத்தினர், கட்சிக்கான நிதியை சேர்த்து அளிக்கும் போது, அவை முறையான கணக்குடன் பராமரிக்கப்படும் என்று கூறினார். எனவே, நிதி சேர்ப்பு மூலம் அரசியல் கட்சிக்கான அச்சாரத்தை கமல் போட்டு விட்டார் என்பதும், நிதி சேர்ப்புக்காக ஒரு ஆப் ஒன்றை தனது பிறந்த நாளில் அறிமுகம் செய்து, முதல் நிதியை அதன் மூலம் அளிப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.