
கார்ட்டூனிஸ்ட் பாலா கைதுக்கு கண்டனம் தெரிவித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்தது கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் செயல் என குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னையை சேர்ந்தவர் பிரபல பத்திரிக்கையாளர் கார்ட்டூனிஸ்ட் பாலா. சில நாட்களுக்கு முன்பு கந்துவட்டி கொடுமையால் திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு குடும்பமே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது.
கந்துவட்டி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என கூறி இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதைதொடர்ந்து இதுகுறித்து கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் நெல்லை மாவட்ட ஆட்சியரையும் போலீசாரையும் கிண்டல் செய்யும் வகையில், கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தார். இதையடுத்து அவதூறு பரப்புவதாக கூறி கார்ட்டூனிஸ்ட் பாலா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கார்ட்டூனிஸ்ட் பாலா கைதுக்கு கண்டனம் தெரிவித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்தது கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் செயல் என குற்றம் சாட்டியுள்ளனர்.