அறிவாலயத்துக்கு போகும் போன்கால்கள்... அதிர வைக்கும் திமுக நிர்வாகிகள்..!

By Thiraviaraj RMFirst Published Feb 10, 2021, 3:50 PM IST
Highlights

மொத்தத்தில் ஆதாயம் அடைந்தது என்னவோ ஐபேக்கின் பிரசாந்த் கிஷோர்தான். எதையாவது அதிரடியாக செய்யுங்கள். இல்லைன்னா ரொம்ப கஷ்டம் என அறிவாலயத்துக்கே போனைப் போட்டுச் சொல்லிட்டோம்

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என காய் நகர்த்தி வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதற்காக ’ஐபேக்’சொல்லும் விதவிதமான தலைப்புகளில் அவர் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார். ஆனால், இவை எதுவுமே மக்களிடம் எடுபடவில்லை என திமுகவினரே புலம்புவதுதான் அறிவாலயத்தை அதிரவைத்துள்ளது.

இதுகுறித்து திமுக கூட்டணி கட்சித் தலைவர் ஒருவர், ’’உண்மைதான். கருணாநிதி அரசியல் என்பது வேறு. ஆனால், ஸ்டாலினால் கருணாநிதி இடத்துக்கு ஒருபோதும் வர முடியாது. ஸ்டாலினும் ஒன்றிணைவோம் வா, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல், மக்கள் கிராமசபை கூட்டம் என விதவிதமாகத்தான் பிரசாரம் செய்து பார்க்கிறார். ஆனால் அவரது துரதிர்ஷ்டம் எதுவும் எடுபட்டதாக தெரியவில்லை. கிராமசபை கூட்ட பிரசாரத்தின்போது, பல இடங்களில் பொதுமக்களிடமிருந்து ஸ்டாலின் வாங்கிக் கட்டிக்கொண்டார். அதிலும் குறிப்பாக கோவையில் நடைபெற்ற பிரசாரத்தின்போது பெண் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் ஸ்டாலின் திணறியது விமர்சனத்தை ஏற்படுத்தியது. 

அடுத்தகட்டமாக தற்போது ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’என்ற பெயரில் பிரசாரத்தைத் தொடங்கி உள்ள அவர், பிரச்சனைகளுக்கு 100 நாட்களில் தீர்வு என்ற வாக்குறுதியை அளித்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். ஆனால், அதற்கும் ‘’எங்கள் ஆட்சியில் 1100 என்ற எண்ணை அழுத்தினால் மக்கள் குறைகள் நேரடியாக தீர்க்கப்படும். பின்னர் எதற்கு மனு?’’என அதற்கும் ஆப்பு வைத்துவிட்டார் எடப்பாடி.

மாணவர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என எல்லா தரப்பையும் மனம்குளிர செய்யும் வகையிலான திட்டங்களை அறிவித்து, அவர்களையும் அதிமுகவுக்கு ஆதரவாக எடப்பாடி திருப்பிவிட்டார். மொத்தத்தில் ஸ்டாலின் பிரசாரம் எடுபடவில்லை என்பதை  ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்’’ என போட்டு உடைத்தார். 

கூட்டணிக் கட்சிகள் தரப்பில் இப்படி என்றால், திமுகவினருமே ’’எங்கள் கைக்காசைப் போட்டு லட்சக்கணக்கில் செலவழித்தும் ஸ்டாலின் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லையே!’’என புலம்பி வருகின்றனர். இது தொடர்பாக பேசிய தென் பகுதியைச் சேர்ந்த திமுக மாவட்டச் செயலாளர் ஒருவர், ’’ கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் ஆட்சியில் இல்லை. இருப்பினும் கட்சி மேலிடம் சொல்கிறதே என்று பொதுக்கூட்டம், தலைவர்களின் பிறந்த நாள், இறந்த நாள் நிகழ்ச்சி என கைக்காசைப் போட்டு செலவழித்து வருகிறோம்.

கொரோனா காலத்தில்  ’ஒன்றிணைவோம் வா’என்ற பெயரில் லட்சக்கணக்கில் செலவை ஏற்படுத்தி விட்டார்கள். இப்போது ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி மேற்கொள்ளும் பிரசாரங்களுக்கும் வாகன ஏற்பாடுகள், ஆட்களை அழைத்து வருவது என லட்சக்கணக்கில் செலவாகிறது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் இருந்து குறைந்தது 20 வாகனங்களாவது வர வேண்டும் என அறிவாலயத்திலிருந்து உத்தரவு போடுகிறார்கள். அப்படி கடன் வாங்கி செலவழித்து கூட்டம் போட்டாலும் ஸ்டாலின் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. மொத்தத்தில் ஆதாயம் அடைந்தது என்னவோ ஐபேக்கின் பிரசாந்த் கிஷோர்தான். எதையாவது அதிரடியாக செய்யுங்கள். இல்லைன்னா ரொம்ப கஷ்டம் என அறிவாலயத்துக்கே போனைப் போட்டுச் சொல்லிட்டோம்’’ என அதிர வைத்தார்.

click me!