80 வயதிற்கு மேற்பட்டோருக்கான தபால் வாக்கில் முறைகேடு நடக்க வாய்ப்பு.. கவனம் தேவை.. கே.டி.ராகவன் எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Feb 10, 2021, 3:26 PM IST
Highlights

அதேபோல் தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டு நேரத்தில் தேர்தல் நடத்த கூடாது என்றும் கோரிக்கை வைத்து உள்ளதாக தெரிவித்தார்.  

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள சலுகையில் முறைகேடுகள் நடக்க வாய்புகள் அதிகம் என்பதால் அதை  கவனத்துடன் கையாள வேண்டும் என தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி ராகவன் கூறியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அதை எதிர் கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக இரண்டு நாள் பயணமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு சென்னை வந்துள்ளது. முதல் நாளான புதன்கிழமை (இன்று) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகளை தனித்தனியாக சந்தித்து அலோசனை மற்றும் கருத்துக்களை கேட்டு வருகின்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் பாஜக மாநில பொது செயலாளர் கே.டி.ராகவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் இதுவரை ஒரே நாளில் தேர்தல் நடத்தி முடிக்கப்படுவது வழக்கம். எனவே எதிர்வரும் தேர்தலையும் ஒரே நாளில் தேர்தல் நடத்தவேண்டும் என்று ஆணைய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார். அதேபோல் தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டு நேரத்தில் தேர்தல் நடத்த கூடாது என்றும் கோரிக்கை வைத்து உள்ளதாக தெரிவித்தார். 

மேலும் தற்போது தமிழகத்தில் உள்ள வாக்கு சாவடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும் என்றும் பிரச்சினைக்குரிய தொகுதிகளில் பாதுகாப்பு பலமாக இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்றும்  கோரிக்கை வைத்து உள்ளதாக கூறிய அவர், 80 வயதிற்கும் மேற்பட்ட நபர்கள் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளதில் முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது, எனவே அதனை கவனமாக கையாள வேண்டும் என்றும் ஆணையத்திடம் வழியுறுத்தியதாக தெரிவித்தார்.  

 

click me!