
வரலாறு காணாத அளவு பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 1 ரூபாய் குறைக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. நாளை முதல் இது அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்ததையடுத்து, தற்போது அவற்றின் விலை தாறுமாறாக எகிறிக்கிடக்கிறது. முன்பு மாதம் இருமுறை மட்டும் மாற்றப்பட்டு வந்த விலை தற்போது நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தபடியே உள்ளது. பெட்ரோல் விலை 82 ரூபாயைக் கடந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், மத்திய அரசு கலால் வரியைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் திட்டத்தையும் கைவிட்டுள்ளது.
கடந்த 15 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 80 காசுகளும், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் 38 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது,
இந்நிலையில், கேரள அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தலா ஒரு ரூபாய் குறைக்க முடிவு செய்துள்ளது. நாளை முதல் இந்த விலைக் குறைப்பு அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டார்.
இதன் மூலம் இந்தியவிலேயே பெட்ரோல்,டீசல் விலையை குறைத்த முதல் டாநிலம் என்ற பெருமையை கேரள அரசு பெறுகிறது. மேலும் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.