
லாட்டரி அடித்தது போல பழனிசாமிக்கு முதல்வர் பதவி கிடைத்துள்ளதாக இன்று நடந்த மாதிரி சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரை முருகன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தாறுமாறாக கலாய்த்துள்ளார்.
துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்காகத் தமிழக சட்டப்பேரவை நேற்று மீண்டும் கூடியது. ஜூலை 9ஆம் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. முதல் நாளான நேற்று வனத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடந்தன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக எம்.எல்.ஏ.க்கள் கறுப்புச் சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த திமுகவினர் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை ஒத்திவைத்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி விவாதிக்க திமுகவினர் சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை அளித்தனர்.
விதி எண் 56இன் கீழ் அவையை ஒத்திவைத்து விவாதிக்க ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். எனினும், திமுகவின் ஒத்திவைப்புத் தீர்மானத்தை ஏற்க சபாநாயகர் தனபால் மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து, மதியம் 12.30 மணியளவில் திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகும் வரை அவை நடவடிக்கைகளில் திமுக பங்கேற்காது”, அதற்க்கு மாறாக இந்த கூட்டத்தொடர் முடியும் வரை மாதிரி சட்டசபை நடத்துவதாக கூறினார்.
நேற்று சொன்னதைப்போல இன்று அண்ணா அறிவாலயத்தில் தொடங்கிய மாதிரி சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசுகையில், களத்திலே நின்று போட்டியிட்டு மக்களின் ஆதரவோடு நாம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனோம். ஆனால் சட்டமன்றத்தில் பேச வேண்டிய நாம் இங்கு மாதிரி சட்டப்பேரவையில் கூடியிருப்பது கனத்த இதயமாக உள்ளது.
தமிழக சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விக்கு பதில் கூற இயலாத இந்த அதிமுக அரசு எதிர்க் கட்சிகளை சபையில் இருந்து விரட்டுவதிலேயே வேகமாக இருக்கிறார்கள். தமிழக சட்டப் பேரவையில் மரபே இல்லாமல் ஒரு கட்டப் பஞ்சாயத்து போல செயல்படுகிறது அதிமுக அரசு என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும், எதிர்க்கட்சிகள் இல்லாமல் ஒரு சட்ட சபையை நடத்துவது பேடித்தனம். வாருங்கள் உட்கார்ந்து பேசலாம் என்ற மாண்பு சபாநாயகரிடமும் இல்லை, பினாமி ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் இந்த முதல்வரிடமும் இல்லை என்று துரைமுருகன் கூறினார்.
தொடர்ந்து பேசிய துரைமுருகன், செவிகேட்காத சொற்களை எதிர்க்கட்சிகள் சொல்லலாம், அதனை பொறுக்க வேண்டியவர்கள் ஆளுங்கட்சியாக இருக்க வேண்டும், ஏதோ இந்த ஆட்சி ஓடிக்கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு லாட்டரி அடித்தது போல தமிழகத்தில் முதல்வர் பதவி கிடைத்துள்ளது, அதனால் தான் முதல்வராக ஆளும் திறமை இல்லாமல் தனது முதல்வர் பதவி காலத்தை கழித்து வருவதாக துரைமுருகன் கலாய்த்துள்ளார்.