
மக்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி உள்ளார்கள் என்று ரஜினி கூறியிருப்பதற்கு அடிப்படை ஆதாரம் என்ன என்பதை அவர் விளக்க வேண்டும்
என்று நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். தற்போது அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை ரஜினிகாந்த் இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கினார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், மக்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால்தான் கலவரம் ஏற்பட்டது என்று கூறினார்.
தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்து விட்டதாகவும், சமூக விரோதிகளை ஜெயலலிதா ஆட்சியின்போது எப்படி ஒடுக்கப்பட்டு வைத்திருந்தார்களோ
அதேபோன்று இந்த அரசும் செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
ரஜினியின் இந்த கருத்தை பல்வேறு அரசியல் கட்சியினரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவரது இந்த கருத்து குறித்து நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், ரஜினி கருத்து பாஜகவின் எதிரொலியாகவே உள்ளது என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில், சமூக விரோதிகள் ஊடுருவல் என்று ரஜினி கூறியிருப்பது பாஜகவின் எதிரொலியாகவே தோன்றுகிறது. மக்கள்
போராட்டத்தை சமூக விரோதிகள் ஊடுருவல் என்பது வேதனை அளிக்கிறது. இப்படி கூறியிருப்பதன் அடிப்படை ஆதாரம் என்ன என்பதை அவர் விளக்க
வேண்டும் எனவும் சரத்குமார் பதிவிட்டுள்ளார்.