
மக்கள் கை தட்டும் கருத்துக்கள் எல்லாம் நல்ல கருத்துக்கள் என எடுத்துக்கொள்ள முடியாது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் மெர்சல். இப்படம் வெளியாகும் முன்பு பல சர்ச்சைகளின் காரணமாக இழுக்கடிக்கப்பட்டு வந்தது.
ஆனால் பல எதிர்ப்புகளையும் மீறி தீபாவளி அன்று மெர்சல் படம் வெளியானது. வெளியான பின்னரும் மெர்சல் திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறது. காரணம், அப்படத்தில் மத்திய அரசு கொண்டுவந்த ஜி.எஸ்டி குறித்தும் பணமதிப்பிழப்பு குறித்தும் வசனங்கள் உள்ளன.
இந்த வசனங்கள் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளன. ஆனால் பாஜக மத்தியில் கடும் கொந்தளிப்பை பரிசாக கொடுத்துள்ளது. மேலும் மெர்சல் படத்தில் இருந்து அந்த குறிப்பிட்ட வசனங்களை நீக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், மக்கள் கை தட்டும் கருத்துக்கள் எல்லாம் நல்ல கருத்துக்கள் என எடுத்துக்கொள்ள முடியாது என்றும், படத்தில் விமர்சிப்பது கருத்துச்சுதந்திரம் என்றால் அதனை நாங்கள் விமர்சிப்பதும் கருத்துசுதந்திரமே என்றும் தெரிவித்துள்ளார்.
பணமதிப்பிழப்பால் திருடுவதும் குடிப்பதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது தமிழிசை தெரிவித்துள்ளார்.