
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை மீண்டும் குரோம்பேட்டையில் நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொது மக்களும், பயணிகளும் தங்களது வீடுகளுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பட்டினியுடன் பேருந்து நிலையத்தில் காத்துக் கிடக்கின்றனர்.
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2.57% ஊதிய உயர்வு கோரிய நிலையில், 2.40% வழங்க அரசு ஒப்புதல் அளித்ததால் இது தொடர்பான பேச்சு வார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.
இதையடுத்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு விட்டு பணிமனைக்கு பேருந்துகளை காலியாக கொண்டு செல்கின்றனர்.
இப்படி முன்னறிவிப்பின்றி பேருந்துகளை நிறுத்தியதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். அலுவலகம் சென்றோர் வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.
பேருந்து நிலையங்களில் ஸ்தம்பித்துப் போய் பொதுமக்கள் திணறி வருகின்றனர். சென்னை அய்யப்பன்தாங்கல், பூந்தமல்லி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பேருந்துகளை நிறுத்தி ஊழியர்கள் போராட்டம் நடத்தியதோடு மட்டுமல்லாமல் பயணிகளையும் ஆங்காங்கே இறக்கிவிட்டுச் சென்றனர்.
சென்னையில் திருவான்மியூர், ஆவடி, கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
தாம்பரம் பேருந்து நிலையத்திலும் பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல் மதுரை, கோவை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பேருந்துகள் நிறுத்ததப்பட்டுள்ளன.
இதனிடையே பள்ளிக் கூடங்களுக்குச் சென்ற மாணவ – மாணவிகளும் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். நீண்ட தூரம் அரசுப் பேருந்தில் பயணம் செய்து பள்ளிக்கு சென்ற மாணாவர்கள் கையில் பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.
ஏராளமான பொது மக்களும் தங்களிடம் குறைந்த அளவே பணம் உள்ளதால், வேறு வாகனங்களில் செல்ல முடியாமல் பேருந்து நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
வெளியூர்களுக்குச் செல்ல வேண்டியவர்களும், பேருந்துகள் இல்லாததால் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு என்பது கட்டாயம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்த பயணிகள், கொஞ்சம் சொல்லிட்டு செஞ்சிருக்கலாம்ல எனதங்களது ஆதங்கங்களை கொடித் தீர்த்து வருகின்றனர்.
இதனிடையே தமிழக அரசின் அணுகுமுறையை எதிர்கொள்ள, வேலைநிறுத்தத்தை தவிர வேறு வழி தெரியவில்லை என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.