அமைச்சர்கள் சொந்த காசுல உதவுறாங்க! நீங்க ஏன் பண்ணல? திமுக கூட்டணி எம்பியை சரமாரியாக கேள்வி எழுப்பிய மக்கள்..!

By Manikandan S R SFirst Published May 21, 2020, 10:20 AM IST
Highlights

தங்கள் சொந்த செலவில் எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் உதவதை குறிப்பிட்டு கேட்டபோது, அது அவர்களின் சொந்த காசு என உங்களால் நிரூபிக்க முடியுமா? என எம்.பி எதிர்கேள்வி கேட்கிறார். அதை நாங்கள் நிரூபிக்க தயாராகவே இருக்கிறோம். கிராமம், நகரம் என அனைத்து பகுதிகளுக்கும் அவர்கள் நிவாரணம் வழங்கி வருகிறார்கள். நாங்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் காரை எடுத்துக் கொண்டு விரைவாக எம்.பி வெளியேறுகிறார்.

நாமக்கல் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருப்பவர் ஏ. கே. பி. சின்ராஜ். கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சியை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். தற்போது கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதை சீர்செய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தனிப்பட்ட முறையிலும் மக்கள் பிரதிநிதிகள் நிவாரணப்பணிகள் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக நாமக்கல் எம்.பி சின்ராஜ் திருச்செங்கோடு நகராட்சி அலுவகத்திற்கு வருகை தந்திருந்தார். அதை அறிந்த அப்பகுதி பெண்கள் ஏராளமானோர் திரண்டு வந்து எம்.பியை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இக்கட்டான நேரத்தில் சிக்கியிக்கும் போது 55 நாட்களுக்கும் மேலாக தேர்ந்தெடுத்த மக்களின் நிலை பற்றி கவலை கொள்ளாமல் இப்போது ஏன் வந்தீர்கள்? என அப்பெண்கள் எம்.பியிடம் சரமாரி கேள்வி எழுப்பினர். அதற்கு 3 மாதங்களில் எல்லாம் சரியாகி விடும். எந்த உதவி தேவை என்றாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என அவர் பதிலளித்து விட்டு சென்றுள்ளார். எம்.எல்.ஏ, அமைச்சர்கள் எல்லாம் தங்கள் சொந்த பணத்தில் மக்களுக்கு உதவி வரும்போது எம்.பி ஏன் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை எனவும் கேட்டுள்ளனர்.

இதுகுறித்து அப்பெண்கள் செய்தியாளர்களிடம் கூறியாவது: கொரோனாவால் மக்கள் அவதிப்பட்டு வரும் நேரத்தில் 55 நாட்கள் கழித்து தொகுதி பக்கம் எம்.பி வந்திருக்கிறார். எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் தீவிரமாக  நிவாரணப்பணிகள் செய்வதை கூறினால், அவர்கள் கொடுக்கும் அரிசியும் 200 ரூபாயும் போதுமா? என எம்.பி அலட்சியமாக கேட்கிறார். தங்கள் சொந்த செலவில் எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் உதவதை குறிப்பிட்டு கேட்டபோது, அது அவர்களின் சொந்த காசு என உங்களால் நிரூபிக்க முடியுமா? என எம்.பி எதிர்கேள்வி கேட்கிறார். அதை நாங்கள் நிரூபிக்க தயாராகவே இருக்கிறோம். கிராமம், நகரம் என அனைத்து பகுதிகளுக்கும் அவர்கள் நிவாரணம் வழங்கி வருகிறார்கள்.

நாங்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் காரை எடுத்துக் கொண்டு விரைவாக எம்.பி வெளியேறுகிறார். தொகுதி மக்களுக்கு என்ன செய்தீர்கள் என கேட்டால் ஒரு எம்.பியாக இருந்து கொண்டு பதில் கூறாமல் சென்று விட்டார் என அப்பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வாக்குவாதம் நடந்த நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க எம்.பியும் அவருடன் இருந்தவர்களும் முகக்கவசம் அணியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணி எம்.பி ஒருவரை தொகுதி மக்கள் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பிய சம்பவம் அரசியல் அரங்கில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

click me!