முரசொலி, தயாநிதி மாறன் விவகாரம்.. அடுத்தடுத்து தேசிய எஸ்.சி. ஆணையம் மூலம் திமுகவுக்கு தமிழக பாஜக குடைச்சல்..?

By Asianet TamilFirst Published May 21, 2020, 8:19 AM IST
Highlights

தயாநிதி மாறன் பேச்சு குறித்து  தாமாக முன்வந்து விசாரிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழக தலைமைச் செயலாளர், தமிழக காவல் துறை தலைவர், சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. முரசொலியைத் தொடர்ந்து தயாநிதி மாறன் விவகாரத்திலும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வரை திமுகவை இழுத்துவந்து விட்டுள்ளது தமிழக பாஜக. 

முரசொலி நில விவகாரம், தயாநிதி மாறன் பேச்சு என அடுத்தடுத்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் மூலம் திமுகவுக்கு பாஜக நெருக்கடி கொடுக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 ‘அசுரன்’ படத்தைப் பார்த்துவிட்டு, அந்தப் படத்தை பாராட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்ட ட்விட்டும், அதற்குப் பதிலாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இட்ட ட்வீட்டும் முரசொலி நிலம் சம்பந்தமான விவகாரமானது. முரசொலி நிலமே பஞ்சமி நிலத்தில்தான் உள்ளது என்று டாக்டர் ராமதாஸ் சொன்ன உடனே, அந்த நிலத்தின் பட்டாவை பொதுவெளியில் விட்டதோடு, அதற்கு பாமகவுக்கு மு.க. ஸ்டாலினும் சாவாலும் விட்டார். இந்த விவகாரத்தில் திமுக - பாமக ட்விட்டர் மற்றும் அறிக்கை வாயிலாக மோதிக்கொண்டிருக்க, இடையில் புகுந்தது பாஜக.


அக்கட்சியின் மாநில செயலாளர் சீனிவாசன், பஞ்சமி நிலத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பற்றி விசாரிக்க வேண்டும் என்று தேசிய  தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரைப் பெற்றுக்கொண்டு திமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பியது தேசிய  தாழ்த்தப்பட்டோர் ஆணையம். சென்னையில் அந்த விவாகரத்தை விசாரித்தது, இன்றைய பாஜக தலைவரான அன்றைய தேசிய  தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவரான எல்.முருகன். இந்த விவகாரத்தை விசாரிக்க எல்.முருகனுக்கு அதிகாரம் இல்லை என்று நேரிடையாகச் சொல்லிவிட்டு வந்தார் திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி. தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது.
ஆனால், முரசொலி நிலம் விவகாரம் தொடர்பாக பாமக தொடங்கி வைத்ததை பாஜகத்தான் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு விமர்சிக்கத் தொடங்கியது. குறிப்பாக சமூக ஊடகங்களில் ‘மூலப்பத்திரம்’ எங்கே என்று பாஜகவினர் அடிக்கடி ஹாஷ்டேக் வெளியிட்டு திமுகவை சீண்டினர். சமூக ஊடகங்களில் இது திமுகவுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியது.


தற்போது தயாநிதி மாறன் பேச்சையும் பாஜகவே கையில் எடுத்து பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ‘ நாங்க எல்லாரும் தாழ்த்தப்பட்டவர்களா’ என்று தயாநிதி மாறன் பேசியதையும், தலைமைச் செயலாளரை விமர்சித்ததையும் ஆளும் அதிமுகவே, ‘எங்களோடு மோதுங்கள், அதிகாரிகளுடன் வைத்துக்கொள்ள வேண்டாம்’ என்ற அளவோடு முடித்துக்கொண்டது. ஆனால், தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் வழிகாட்டுதல்படி அக்கட்சியின் எஸ்.சி. பிரிவின் சார்பில் தயாநிதி மாறனுக்கு எதிராக தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள காவல் நிலையங்களில் புகார்கள் தரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில் தயாநிதி மாறன் பேச்சு குறித்து  தாமாக முன்வந்து விசாரிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழக தலைமைச் செயலாளர், தமிழக காவல் துறை தலைவர், சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. முரசொலியைத் தொடர்ந்து தயாநிதி மாறன் விவகாரத்திலும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வரை திமுகவை இழுத்துவந்து விட்டுள்ளது தமிழக பாஜக. அரசியல் ரீதியாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தை பாஜக பயன்படுத்துவதாகவும், அதன் அடிப்படையிலேயே, முரசொலியைத் தொடர்ந்து இப்போது தயாநிதி மாறன் விவாகரத்தையும் பாஜக பயன்படுத்துவதாக திமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

click me!