
தேர்ந்தெடுக்கும் செயல்திறன் மக்களுக்கு இல்லாமல் இருப்பதால்தான், தேர்ந்தெடுக்கப்படுபவர் தகுதியானவராக இருப்பதில்லை என்றும் இது ஜனநாயகத்துக்கு கெட்ட காலம் என்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் கூறியுள்ளார்.
முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், தங்களை ஆள்வதற்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான நாள்தான் தேர்தல். இந்த ஜனநாயக தெளிவு மக்களுக்கு கொஞ்சமாவது இருக்கிறதா என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த தேவசகாயம், தேர்தல் என்பது எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் நாள் மட்டுமல்ல. நம்முடைய அரசியல் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஜனநாயக தினமும்கூட என்றார். ஆனால், அதைப் பெரும்பான்மை மக்கள் இன்னமும் உணரவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டவசமானது என்றார்.
வாக்களிப்பதை சிலர் மட்டுமே அதற்கான உண்மையான பொருள் தெரிந்து செய்கிறார்கள். பலரும் எந்த உணர்ச்சியும் இல்லாமல் வாக்களிக்கிறார்கள் என்று கூறினார். சாதிக்காக, மதத்துக்காக, கட்சிக்காக சிலர் வாக்களிக்கிறார்கள். பணத்துக்காக சிலர் வாக்களிக்கிறார்கள். அரசாங்கம் விடுமுறை அளித்திருக்காங்க... அதனால சும்மா போய் போட்டு வைப்போம் என்று சிலர் நினைக்கிறார்கள். கண்ணை மூடிக் கொண்டு சிலர் யாருக்கோ ஓட்டு போடுகிறார்கள். மூனாம் நம்பர்ல யாரு பேரு இருக்கோ அவருக்கு போடுவேன் ஒருவர் நம்பராலஜி சொல்கிறார். இப்படி இருந்தால் ஜனநாயகம் எப்படி சாத்தியமாகும்? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், வசதி படைத்தவர்களுக்கு மட்டும் இருந்த வாக்களிக்கும் உரிமை, வயது வந்தவர்கள் அனைவருக்கும் என்று மாற்றியதே, அனைத்து மக்களுக்கும் ஜனநாயக உரிமை வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் வாக்களிப்பவர்களும் தேர்ந்தெடுக்கும் செயல்திறன் இல்லாமல் இருக்கிறார்கள். இதனால்தான் தேர்ந்தெடுக்கப்படுபவர் தகுதியானவராக இருப்பதில்லை. ஜனநாயகத்துக்கு இது கெட்ட காலம் என்று ஐ.ஏ.எஸ். தேவசகாயம் அதிரடியாக கூறியுள்ளார்.