
திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மேற்கொண்டு, ஆய்வு செய்து வருகிறார்.
ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் டிச.6 இன்று, திருநெல்வேலிக்கு வந்திருந்தார். நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் திருநெல்வேலி ஜங்சன் பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அண்மை மழையில் அதிகம் பாதிக்கப்பட்டு குப்பையும் சகதியுமாக இருந்த நெல்லை ஜங்ஷன், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தூய்மைப் பணிகளைப் பார்வையிட்டு, குப்பைகளை அகற்றினார்.
நெல்லையில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநருடன் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அரசு அதிகாரிகள் என பலரும் உடன் வந்தனர். இந்த நிகழ்வின் போது, எம்.எல்.ஏக்களோ அமைச்சர்களோ எவரும் உடன் வரவில்லை. நெல்லை ஜங்ஷன் பகுதியைத் தொடர்ந்து, நெல்லையின் பிரதான பகுதியான பாளையங்கோட்டைக்கும் செல்கிறார் ஆளுநர். அங்கே, பொதுமக்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
முன்னதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் ஆய்வு மேற்கொள்ள வருவதாகத் தகவல் வெளியானதால், முன்னெச்சரிக்கையாக நீண்ட நாட்கள் கவனிப்பாரின்றிக் கிடந்த சாக்கடை ஓடைக்கு தற்காலிகமாக மூடி போட்டனர். மேலும் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மழையினால் தேங்கிய சகதியை அப்புறப் படுத்தி, தூய்மைப் படுத்தியிருந்தனர்.
முன்னர் இதுபோல் கோவையில் பல்கலை., பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிந்த ஆளுநர் பன்வாரி லால், அங்கே ஆய்வு செய்ததற்கு பல கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஆனால், தான் தொடர்ந்து பல மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வுப் பணியில் ஈடுபடுவேன் என்று கூறினார் புரோஹித். அவரது அறிவிப்புக்கு பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தனர்.
நெல்லையைத் தொடர்ந்து கன்னியாகுமரியிலும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.