மக்களே உஷார்.. மே 1 முதல் 15 வரை கொரோனா உக்கிரம் பெறும்.. இந்திய விஞ்ஞானிகள் அதிர்ச்சி.

By Ezhilarasan BabuFirst Published Apr 24, 2021, 11:49 AM IST
Highlights

தற்போதைக்கு 24. 28 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,260 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஒட்டுமொத்த இந்தியாவையும் வாட்டி வதைத்து வரும் கொரோனா கொத்துக் கொத்தாக உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் இந்த வைரஸ் உச்சத்தை தொடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். வைரஸ் தொற்று உச்சத்தை அடையும்போது பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 35 லட்சத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்  ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை பல்வேறு நாடுகளில் தீவிரமாக உள்ளது. குறிப்பாக இந்தியாவை இந்த வைரஸ்  மிகக் கொடூரமாக தாக்கி வருகிறது. நாளொன்றுக்கு 3.32 லட்சம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

தற்போதைக்கு 24. 28 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,260 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை கலைய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மெல்ல மெல்ல கொரோனா வீரியம் அடைந்து வரும் நிலையில், இது அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் உச்சத்தை எட்டும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கான்பூர் ஐஐடி மற்றும் ஹைதராபாத் ஐஐடி (பேராசிரியர்கள்) விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் மற்றும் அதன் போக்கு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அதில் சூத்ரா என்று அழைக்கப்படும் பார்முலாவை பயன்படுத்தி வைரஸ் தொற்று அடுத்த மாதல் மிகத் தீவிரமாக இருக்கும் என கணித்துள்ளனர். 

இதுகுறித்து அவ்விஞ்ஞானிகள் கூறியிருப்பதாவது, அடுத்த மாதம் 11 ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதிக்குள் இந்தியாவில் கொரோனா உச்சக்கட்டத்தை அடையும். அப்போது 33 லட்சத்தில் இருந்து 35 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பர். இதுவே அதிகபட்ச உச்சமாக இருக்கும், அதைத்தொடர்ந்து திடீரென கொரோனா வைரஸ் வேகமாக குறையும், அடுத்த மாத இறுதியில் ஆச்சரியப்படும் வகையில் அதன் பாதிப்பு குறைவதை பார்க்க முடியும். சூத்ரா மாதிரியின் கணிப்பு தினந்தோறும் ஏற்படக்கூடிய தோற்றி எண்ணிக்கையை ஒத்துள்ளது என அவர்கள் கூறியுள்ளனர். அதாவது நாளொன்றுக்கு ஒரு நபரால் எத்தனை நபருக்கு தொற்று பரவுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு இது கணிக்கப்படுகிறது. என விஞ்ஞானிகள்  தெரிவித்துள்ளனர்.

 

click me!