தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி..! கப்சிப் திமுக..! பின்னணி என்ன?

By Selva KathirFirst Published Apr 24, 2021, 11:46 AM IST
Highlights

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக திமுக எதையும் கூறாமல் கப்சிப் என அமைதி காத்து வருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக திமுக எதையும் கூறாமல் கப்சிப் என அமைதி காத்து வருகிறது.

கொரோனா பரவல் டெல்லி, நொய்டா, மும்பையில் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் அங்கெல்லாம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் தேவைப்படும் அளவிற்கு ஆக்சிஜனை கொடுக்க முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றனர். இந்தியாவில் ஒரு நாளைக்கு 7ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் தற்போதைய தேவை 5ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே. ஆனாலும் கூட ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு காரணம் விநியோகத்தில் உள்ள பிரச்சனைகள் தான் என்கிறார்கள்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் உள்ள தங்கள் ஆலையில் தினசரி 1050 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய இயலும் என்றும் தங்களை அனுமதித்தால் தினசரி தங்களால் முடிந்த அளவிற்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்துஇலவசமாக மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்குவதாக கூறியது. ஆனால் இந்த விவகாரத்தில் தமிழக அரசும், மத்திய அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடியது. அப்போது ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது.

ஆனால் மத்திய அரசு வழக்கறிஞரோ, மக்களின் உயிருடன் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை மட்டும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. இதனை தொடர்ந்து தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆதரவு மற்றும் எதிர்ப்பு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூடினர். அங்கு ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட்டை அனுமதிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், அனுமதிக்க கூடாது என்று மற்றொரு தரப்பினரும் மல்லுக்கு நின்றனர். ஆனால் ஸ்டெர்லைட் விவகாரம் பூதாகரமான போது முன்னின்று போராட்டம் நடத்திய தூத்துக்குடி திமுக எம்எல்ஏ கீதா ஜீவனை அந்த பகுதியில் பார்க்க முடியவில்லை.

இதே போல் நாம் தமிழர், அதிமுக உள்ளிட்டோரும் கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு வரவில்லை. இது ஒரும் புறம் என்றால் இந்த விஷயத்தில் தமிழக அரசு கூட ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டது. அதாவது ஆக்சிஜன் உற்பத்திக்க என்றாலும் கூட ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது என்பது தான் அதிமுக அரசின் நிலைப்பாடு. ஆனால் இந்த விவகாரத்தில் திமுகவிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வரவில்லை. குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் கப்சிப் என இருக்கிறார்.

அதே சமயம் திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதிலும் உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்வியை முழுமையாக எடுத்துக்கூறாமல் அதில் சிலவற்றை வெட்டிவிட்டு கூறியுள்ளார். மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் நிலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட்டை ஏன் அனுமதிக்க கூடாது என்றே உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் கனிமொழியோ? ஸ்டெர்லைட் ஆலையையே உச்சநீதிமன்றம் ஏன் மறுபடியும் இயங்க அனுமதிக்க கூடாது? என்று கேள்வி எழுப்பியது போல் ட்வீட் செய்துள்ளார். இதனை திமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ரீட்வீட் செய்துள்ளது.

ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ இந்த விவகாரத்தில் அமைதி காத்து வருவதற்கு காரணம் இந்த விவகாரம் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்புடையது என்பதால் தான் என்கிறார்கள். ஒருவேளை எதிர்காலத்தில் தமிழகத்தில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டால் ஏன் அப்போதே ஸ்டெர்லைட்டை ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கவில்லை என்று கேள்வி எழும், அப்போது ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் அது விமர்சனத்திற்கு ஆளாகக்கூடும் என்பதால் தான் அமைதி காப்பதாக சொல்கிறார்கள். அதே சமயம் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மத்திய அரசை இந்த விவகாரத்தில் எதிர்க்க வேண்டாம் என்று கூட ஸ்டாலின் நினைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

click me!