
குடிபோதையில் சொகுசு காரில் அதிவேகமாக வந்து வாகனத்தில் மோதிய அமைச்சரின் உறவினர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காரை நொறுக்கி ஓட விட்டனர்.
ஈரோடு மாவட்டம் சித்தாறு அருகே தமிழக சுற்றுசூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் உறவினர்கள் குடிபோதையில் இரண்டு சொகுசு காரில் மேட்டூர் – ஈரோடு நெடுஞ்சாலையில் பந்தையத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அதிவேகமாக வந்த அமைச்சர் உறவினர்களின் கார் ஆனது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதையடுத்து பொதுமக்கள் காரை சுற்றி வளைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலைதுறை போலீசார் அமைச்சரின் உறவினர்களுக்கு சாதகமாக பேசி உள்ளனர். மேலும் அவர்களை தப்பிக்க வைக்கும் செயலில் போலீசார் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சொகுசு காரை அடித்து நொறுக்கினர். மேலும் சொகுசு காரில் வந்த அமைச்சர் உறவினர்கள் 4பேருக்கும் தர்ம அடி கிடைத்தது. இதைதொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால் ஏரளாமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.