முதல்வரால்தான் மக்கள் ஆர்வமா வராங்க... இது எடப்பாடிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி... பூரிப்பில் செல்லூர் ராஜூ.!

By Asianet TamilFirst Published Apr 15, 2021, 8:46 PM IST
Highlights

முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். இது முதல்வருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. எனவே, கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளும்படி பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா  நடத்தப்பட்டு வருகிறது. இதில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கொரோனா வைரஸின் இரண்டாம் அலையில் இருந்து மக்கள் விரைவில் விடுபட வேண்டும். இதற்காக நான் பிரார்த்தனை மேற்கொள்கிறேன்.

தமிழகத்தில் தொடர்ந்து அமைதியான நல்லாட்சி நடைபெற வேண்டும். தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு, பிந்தைய கருத்துக் கணிப்பு என்றெல்லாம் எதுவும் இல்லை. தேர்தல் முடிவுகளில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. தற்போது பெருவாரியான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்கிறார்கள். இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். இது முதல்வருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. 
இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் முறையான நடவடிக்கை எடுத்துள்ளார். கொரோனாவிலிருந்து விடுபட 'தனித்திருக்க வேண்டும் விழித்திருக்க வேண்டும்' என்பதே முதல்வரின் வேண்டுகோள். இதை மக்கள் எல்லோரும் பின்பற்ற வேண்டும்.” என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

click me!