
’சைலண்ட் பாம்’ என்பார்கள் ப.சிதம்பரத்தை. எவ்வளவு பிரச்னையென்றாலும் டென்ஷனாகமாட்டார். ஆனால் அதிராமல் அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலிருக்கும்.
ஆனால் பி.ஜே.பி. விஷயத்தில் மட்டும் ப.சிதம்பரத்தின் நிலை மாறியிருக்கிறது. வாழைப்பழத்தில் ஊசியில்லை, கடப்பாறையையே இறக்குகிறார். தன் மகனுக்கு எதிரான சி.பி.ஐ. நடவடிக்கையிலும், பணமதிப்பிழப்பு நிகழ்ந்து ஓராண்டான விஷயத்திலும் மோடியை புரட்டிப்போட்டு விமர்சித்தவர் மீண்டும் மீண்டும் தன் தாக்குதலை தொடர்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் விழா ஒன்றில் பேசியவர் “இந்துத்வா எனும் ஆயுதத்தை பயன்படுத்தி தேர்தல்களில் வென்றுவிடலாம் என்று சிலர் நினைக்கின்றனர். உ.பி.யில் இதைத்தான் செய்தார்கள். இப்போது குஜராத் தேர்தலில் இதைத்தான் செய்ய முயல்வார் மோடி. அதை தடுத்து நிறுத்தி அவருக்கு தோல்வி எனும் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளில் இந்த தேசம் நிறைய இழந்துவிட்டது. இந்த சரிவை ஈடுகட்ட வேண்டும். மக்களை இணைக்க வேண்டும் என்றால் எல்லாவிதமான கருவிகளையும் பயன்படுத்த வேண்டும். மக்களை திரட்டாவிட்டால் பி.ஜே.பி. வெற்றி பெற்றுவிடும். அந்த வெற்றியை தடுக்க வேண்டும். குஜராத்தை தொடர்ந்து ம.பி. மற்றும் சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களுக்கும் தேர்தல் வர இருக்கிறது. எல்லாவற்றிலும் இந்துத்வாவை பயன்படுத்தி வெல்ல துடிப்பார்கள், விடவே கூடாது.
இவை எல்லாவற்றையும் விட 2019ல் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இதிலேயும் இதே ட்ரிக்கை பயன்படுத்தும் எண்ணத்தில் இருக்கிறார்கள். ஆனால் அதற்குள் குஜராத், ம.பி. தேர்தலில் அவர்களின் இந்துத்வா கான்செப்டை தோற்கடிப்பதன் மூலம், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு என்ன செய்ய? என அவர்களை தவிக்க விடுவோம்.” என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.
ப.சி.க்கு நமோவின் ரியாக்ஷன் எப்படியிருக்க போகிறது?