
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. கடந்த 70 ஆண்டுகளாக மக்களை மதரீதியாக பிளவு படுத்த முயற்சித்தும் முடியவில்லை. ஆனால், அவர்கள் செய்ய முடியாததை பாரதியஜனதா கட்சி 3 ஆண்டுகளில் செய்துவிட்டது என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரான அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக தாக்கிப்பேசியுள்ளார்.
ஆம் ஆத் கட்சியின் 5-ம் ஆண்டு நிறைவு விழா டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்தது. இதில் அந்த கட்சியின் நிறுவனரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-
நாடு மிகவும் சிக்கலான நேரத்தில் இருக்கிறது. மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி, நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில் இருக்கிறது. இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களையும், முஸ்லிம்களுக்கு எதிராக இந்துகளையும் தூண்டிவிடுகிறது. இந்தியாவை மதரீதியாக பிரிக்க வேண்டும் என்பதுதான் பாகிஸ்தானின் கனவாக இருக்கிறது.
அதைப் புரிந்து கொண்டு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. கடந்த 70 ஆண்டுகளாக செய்ய முடியாததை, பாஜனதா கட்சி 3 ஆண்டுகளில் செய்து, மக்களை மதரீதியாக பிளவுபடுத்திவிட்டது. நாட்டை மதரீதியாக பிளவுபடுத்தி பலவீனப்படுத்த முயற்சிக்கிறது.
ஒவ்வொரு மாநிலத்தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு, ஆம் ஆத்மி கட்சி ஒன்றும் நெப்போலியன் அல்ல. கட்சியின் உண்மையான நோக்கம் என்பது, இப்போதுள்ள முறையை மாற்ற வேண்டும் என்பதாகும். இவ்வாறு அவர் பேசினார்.
நீதிபதிகளுக்கு பாதுகாப்பில்லை..
பா.ஜனதா தலைவர் அமித் ஷா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்த, போலி என்கவுன்டர் ஷராபுதீன் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி பி.எச். லோயா மர்மமாக இறந்தார். இது குறித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசுகையில், “ பா.ஜனதா ஆட்சியில் நீதிபதிகள் கூட பாதுகாப்பாக இல்லை. போலி என்கவுன்ட்டர் வழக்கை விசாரணை செய்த நீதிபதி லோயா மர்மமாக இறந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
குஜராத் மக்கள் வருகின்ற தேர்தலில் பாஜனதா ஆட்சியை வேறோடு பிடுங்கி எறிய வேண்டும். ஒட்டுமொத்த தேசமும் குஜராத் தேர்தலையும், அங்கு பாஜனதா தோற்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறது. குஜராத்தில் வாக்காளர்கள் வேட்பாளர்களைப் பார்த்து வாக்களிக்க வேண்டும், கட்சியைப் பார்க்ககூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.