ஆட்சியில் பங்கு..! ஆசை காட்டிய எடப்பாடியார்..! அடக்கி வாசிக்கும் ராமதாஸ்! அதிமுக கூட்டணி அப்டேட்..!

By Selva KathirFirst Published Feb 17, 2020, 10:43 AM IST
Highlights

தமிழகத்தில் அதிரடி அரசியலுக்கு பெயர் போனவர் ராமதாஸ். வட மாவட்டங்களை பாமகவின் கோட்டையாக்கிய பிறகு அவர் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் அனைத்துமே அதிரடி ரகம் தான். 2001ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் முதல் அடுத்து வந்த தேர்தல்கள் அனைத்திலும் கூட்டணி தொடர்பாக ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுத்து வருபவர் ராமதாஸ். அதிமுக அல்லது திமுகவுடன் மாறி மாறி கூட்டணி அமைத்து வந்த ராமதாஸ் 2014ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.

ஆட்சியில் பங்கு தரப்படும் என்று அதிமுக தலைமையிடம் இருந்து வந்த தகவலை அடுத்தே எடப்பாடி அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து பாராட்டு மழை பொழிந்து வருவது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் அதிரடி அரசியலுக்கு பெயர் போனவர் ராமதாஸ். வட மாவட்டங்களை பாமகவின் கோட்டையாக்கிய பிறகு அவர் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் அனைத்துமே அதிரடி ரகம் தான். 2001ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் முதல் அடுத்து வந்த தேர்தல்கள் அனைத்திலும் கூட்டணி தொடர்பாக ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுத்து வருபவர் ராமதாஸ். அதிமுக அல்லது திமுகவுடன் மாறி மாறி கூட்டணி அமைத்து வந்த ராமதாஸ் 2014ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.

பிறகு 2016 சட்டப்பேரவை தேர்தலில் பாமக தனித்து களம் இறங்கியது. ஆனால் 2019 மக்களவை தேர்தலில் மீண்டும் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது. இப்படி பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தாலும் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கைகள், பேட்டிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளை விமர்சிக்கும் வகையிலேயே இருக்கும். ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி கலைஞராக இருந்தாலும் சரி அவர்கள் கூட்டணி தலைமையாக இருந்தாலும் தங்கள் கட்சியின் கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகள் என்றால் உடனடியாக ராமதாஸ் எதிர் குரல் எழுப்புவார்.

2001 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா அரசை விமர்சித்தார். இதேபோல் 2006 திமுக அரசு அமைந்த பிறகும் கலைஞர் அரசுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து அரசியல் செய்து வந்தார். இதனால் எப்போதும் கூட்டணி தலையுடன் ராமதாசுக்கு இணக்கமான உறவு இருந்தது இல்லை. ஆனால் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகும் தொடர்ந்து அதிமுகவுடன் மிக இணக்கமாக இருந்து வருகிறார் ராமதாஸ். இந்த நிலையில் பட்ஜெட் அறிவிப்பிற்கு வாழ்த்து தெரிவித்து ராமதாஸ் விடுத்த அறிக்கை அவரது கட்சியினரையே ஆச்சரியப்படுத்தியது.

இதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்று 3 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் ராமதாஸ். இந்த அறிக்கையில் அறிவுரைகளோ, விமர்சனங்களோ இல்லை. முழுக்க முழுக்க பாராட்டுகள் மட்டுமே இருந்தன. இந்த அளவிற்கு எடப்பாடி பழனிசாமியுடன் ராமதாஸ் இணக்கமாக செல்ல காரணம் என்ன என்கிற தகவல் தற்போது கசிந்துள்ளது. ரஜினியுடன் கூட்டணி குறித்து ராமதாஸ் பேசியதை தொடர்ந்து அதிமுக மேலிடம் ராமதாசை தொடர்பு கொண்டு பேசியது.

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாமக கூட்டணி எந்த அளவிற்கு முக்கியம் என்பதை அப்போது அதிமுக தலைமை ராமதாசிடம் விளக்கியதாக கூறுகிறார்கள். மேலு சட்டப்பேரவை தேர்தலில் பாமகவிற்கு அவர்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமான இடம், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கூட்டணி அரசு என்பன போன்ற விஷயங்கள் எல்லாம் அப்போது பேசப்ப்டடதாக சொல்கிறார்கள். இதில் ஆட்சியில் பங்கு என்கிற விஷயம் ராமதாசை மிகவும் கவர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள்.

கடந்த ஓராண்டாக பாமகவிற்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி தட்டாமல் நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் சட்டபபேரவை தேர்தலுக்கு முன்னதாக கூட்டணி அரசு, ஆட்சியில் பங்கு என்று பேசி முடித்தால் தேர்தலுக்கு பிறகு பாமக கூட்டணி அரசில் பங்கேற்க வாய்ப்பு அதிகம் என்று ராமதாஸ் நம்புகிறார். இதனால் தான் எடப்பாடி பழனிசாமிக்கு அவரே எதிர்பார்க்காத அளவிற்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் கொட்டி வருகிறாராம் பெரிய அய்யா.

click me!