வெறும் 5 தொகுதிதான் !! ஆனா எத்தன தலைவர்கள் ? தேர்தலில் நிற்க பாஜகவில் குடுமிபிடி சண்டை !!

By Selvanayagam PFirst Published Feb 22, 2019, 7:12 AM IST
Highlights

தமிழகத்தில் 10 தொகுதிகள் வரை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த பாஜகவுக்கு 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கி ஒதுங்கி கொண்டது அதிமுக.  இதனால் கடும் அதிருப்தியில் இருந்த பாஜகவுக்குள் தற்போது யார் வேட்பாளர் என்பதில் குடுமிபிடி சண்டை மூண்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக ஒதுக்கிய குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளால், அதிர்ச்சி அடைந்துள்ள பாஜக, தற்போது வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கடும் குழப்பத்தைச் சந்தித்துள்ளது.

அதிமுகவுடன் நடைபெற்ற கூட்டணி பேச்சு வார்த்தையில் தங்கள் கட்சிக்கு குறைந்து 8 அல்லது 10 தொகுதிகள் கிடைக்கும் என பாஜக பெரும் எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால் வெறும் 5 தொகுதிகள் மட்டுமே பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதில்தான், பாஜக  கோட்டை விட்டு விட்டது என  தற்போது அக்கட்சியினர் புலம்பத் தொடங்கியுள்ளனர்.

5 தொகுதிகளைப் பெற்ற பாஜக தங்களுக்கு சாதகமான தொகுதிகளை கேட்டு வாங்கி, அதற்கேற்ப வேட்பாளர்களை தேர்வு செய்யாமல், வேட்பாளர்களை தேர்வு செய்து, அவர்களுக்காக தொகுதிகளை, பாஜக தரப்பு வலியுறுத்தியது தற்போது பிரச்சனையாகியுள்ளது.

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்காக கன்னியாகுமரியும், சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக கோவையும், உறுதிப்படுத்தப்பட்ட தொகுதிகளாகி விட்டன. ஆனால், அ.தி.மு.க., அளிக்க முன்வந்துள்ளதாக கூறப்படும், திருச்சி, சிவகங்கை, வடசென்னை ஆகிய மூன்று தொகுதிகளிலுமே, முடிவெடுக்க முடியாத அளவு குழப்பம் நிலவுகிறது.

எச். ராஜாவுக்காக, சிவகங்கை என கூறி,தொகுதி பெறப்பட்டுள்ளது; ஆனால், 'அவருக்கு ராஜ்ய சபா எம்.பி., வாய்ப்பு தரலாமே' என்ற யோசனை முன்வைக்கப்பட்டதையடுத்து அவர் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து சிவகங்கையில் போட்டியிட, விண், 'டிவி' அதிபர் தேவநாதன் தீவிரமாக முயற்சிப்பதால்,அவரது பெயர், பாஜக மேலிடத்தின் பரிசீலனையில் உள்ளதுதாக கூறப்படுகிறது..

தமிழக, பாஜக முன்னணி தலைவர்களில் ஒருவரான, கருப்பு முருகானந்தத்துக்காக, திருச்சி தொகுதி பெறப்பட்டுள்ளதாக கூறபடுகிறது; அங்கும் குழப்பம் எழுந்துள்ளது. காரணம்; பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, வானதி சீனிவாசனுக்கு, இப்போது தொகுதியே இல்லை.


இதனால், திருச்சியில்,முருகானந்தத்துக்கு பதிலாக,கடைசி நேரத்தில், வானதி சீனிவாசனை நிறுத்தலாமா என்றும், பாஜக தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

அதேபோல், தமிழக, பாஜக  தலைவர் தமிழிசைக்காக, தென் சென்னை தொகுதி குறிவைக்கப் பட்டது. எவ்வளவோ போராடியும், இந்த தொகுதியை விட்டுத் தர, அதிமுக  மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலாக, வட சென்னை கிடைக்கும் என தெரிகிறது. ஆனால், இங்கு போட்டியிட, தமிழிசை தயங்குவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால், வெறும் ஐந்து தொகுதிகளை மட்டும் கையில் வைத்துக் கொண்டு, யாருக்கு இவற்றை ஒதுக்குவது என்ற கடும் குழப்பத்தில், பாஜக  மேலிடம் தவியாய் தவித்து வருகிறது. 

click me!