வெட்டு ஒன்று; துண்டு இரண்டு... திமுக கூட்டணி கட்சிகளுக்கு காத்திருக்கும் சவால்!

By Asianet TamilFirst Published Jan 21, 2019, 3:34 PM IST
Highlights

குழுவில் இடம்பெற்றுள்ளோர் வெட்டு ஒன்று; துண்டு இரண்டு என்ற ரீதியில் பேசக்கூடியவர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக கட்சி மேலிடம் இவர்களுக்கு வழிகாட்டியிருந்தாலும், அதிக தொகுதிகளில் திமுக போட்டியிடும் வகையில் இவர்கள் பேச்சுவார்த்தையை நடத்துவார்கள் என்றே திமுக தொண்டர்களும் நம்புகிறார்கள்.

தொகுதி உடன்பாடு தொடர்பாக திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் டெல்லி அரசியலில் உள்ள யாருமே இடம் பெறவில்லை. 

நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க., சார்பில் பேச்சு நடத்த, துரைமுருகன் தலைமையில், ஆறு பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக துரைமுருகன், உறுப்பினர்களாக ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகிய ஆகிய சீனியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

டெல்லி அரசியலில் உள்ள எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, ஆ, ராஜா போன்றோர் இக்குழுவில் இடம்பெறவில்லை. இவர்கள் வேறு குழுக்களில் இடம்பெற்றுள்ளனர். 

தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்கள்தான் தொகுதி உடன்பாடு குழுவில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே திமுகவில் சீனியர்கள். இந்த முறை அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று திமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் தொடங்கி மாவட்ட செயலாளர்கள் வரை எல்லோருமே விரும்புகிறார்கள். கடந்த கால அணுகுமுறை போலில்லாமல் கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த சீட்டுகளையே ஒதுக்க வேண்டும் என திமுக தலைமையிடம் வலியுறுத்தி வருகிறார்கள். 

அதற்கேற்ப குழுவில் இடம்பெற்றுள்ளோர் வெட்டு ஒன்று; துண்டு இரண்டு என்ற ரீதியில் பேசக்கூடியவர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக கட்சி மேலிடம் இவர்களுக்கு வழிகாட்டியிருந்தாலும், அதிக தொகுதிகளில் திமுக போட்டியிடும் வகையில் இவர்கள் பேச்சுவார்த்தையை நடத்துவார்கள் என்றே திமுக தொண்டர்களும் நம்புகிறார்கள். குறிப்பாக காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி உடன்பாட்டில் இவர்களுடைய ‘கை’ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதி உடன்பாடு திமுக கூட்டணி கட்சிகளுக்கு சவாலாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. 

click me!