இலங்கையில் விறு விறு நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கியது.! நாளை யார் பிரதமர் என்று தெரிந்துவிடும்.!

By T BalamurukanFirst Published Aug 5, 2020, 9:58 AM IST
Highlights

இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7மணி முதல் நடைபெற்று வருகிறது. வாக்குப் பதிவை முன்னிட்டு இலங்கை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் 9-வது நாடாளுமன்ற தேர்தல் இது. 

இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7மணி முதல் நடைபெற்று வருகிறது. வாக்குப் பதிவை முன்னிட்டு இலங்கை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் 9-வது நாடாளுமன்ற தேர்தல் இது. 

அங்கீகரிக்கப்பட்ட 40 அரசியல் கட்சிகள் மற்றும் 313 சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் 7,452 பேர் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.இந்த தேர்தலில் அதிக வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் 17,85,964 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். குருநாகல் மாவட்டத்தில் 13,48,787பேரும், கண்டி மாவட்டத்தில் 11,29,100 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இம்முறை அதிக வேட்பாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே போட்டியிடுகின்றனர்.கொழும்பில் அரசியல் கட்சிகளின் சார்பில் 352 பேரும் சுயேச்சை வேட்பாளராக 572 பேரும் போட்டியிடுகின்றனர்.வாக்குச் சாவடிகளில் வைரஸ் பரவலுக்கு எவ்வித வாய்ப்பும் இல்லை. வாக்குச் சாவடிகளுக்குள் தொற்றுடன் வரவோ அல்லது வைரஸ் தொற்றுடன் வெளியேறவோ எவ்வித வாய்ப்புகளும் இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த தேர்தல் பணியில் 3லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புக் பணியில் சுமார் 69 ஆயிரம் போலிஸார் மற்றும் சிறப்பு  அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் 08 ஆயிரம் சுகாதாரத்துறை ஊழியர்கள் சுகாதார வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் 196 பேர் தேர்தல்கள் மூலம் தேர்வு செய்யப்படுவர். இவர்களில் 29 பேர் நியமன எம்.பிக்கள்.

இலங்கையில் 22 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1,62,63,885 பேர் வாக்காளர்கள். 7,452 பேர் வேட்பாளர்கள். 12,985 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணிவரை நடைபெறும். வாக்குப் பதிவு முடிவடைந்த உடனேயே வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். மகிந்த ராஜபக்சே தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளிடையேதான் பிரதான போட்டி நிலவி வருகின்றது.

தமிழ், முஸ்லிம் கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ளன. இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் மகிந்த ராஜபக்சேதான் மீண்டும் பிரதமராக வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவித்திருக்கின்றன. ஈழத் தமிழர் வாழும் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கூடுதல் இடங்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வாக்குப் பதிவு, அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.நாளை வாக்கு எண்ணிக்கை தொடங்கும் எனத் தெரிகிறது.

click me!