திமுகவில் உதயநிதி தர்பார்.. கடுகடுக்கும் சீனியர்கள்.. சலசலக்கும் மேலிடம்.. அன்றே சொன்ன ஏசியாநெட் தமிழ்..!

By Selva KathirFirst Published Aug 5, 2020, 9:48 AM IST
Highlights

திமுகவில் மாவட்டச் செயலாளர் நியமனம் வரை உதயநிதியின் அதிகாரம் நீண்ட நிலையில் சீனியர்கள் அனைவரும் டென்சனில் இருப்பதாக ஏசியா நெட் கடந்த வாரம் கூறியிருந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையிலான செயல்கள் திமுகவில் அரங்கேறி வருகிறது.

திமுகவில் மாவட்டச் செயலாளர் நியமனம் வரை உதயநிதியின் அதிகாரம் நீண்ட நிலையில் சீனியர்கள் அனைவரும் டென்சனில் இருப்பதாக ஏசியா நெட் கடந்த வாரம் கூறியிருந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையிலான செயல்கள் திமுகவில் அரங்கேறி வருகிறது.

தன்னுடைய நிழலாக இருந்த கு.க.செல்வம் தன்னை இப்படி அவமானப்படுத்துவார் என்று நேற்று காலை வரை ஸ்டாலின் நம்பவில்லை என்கிறார்கள். கு.க.செல்வம் டெல்லி சென்ற தகவல் நேற்று காலை தான் ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு வரை ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லாமலேயே கு.க.செல்வத்தை சமாதானம் செய்ய எ.வ.வேலு உள்ளிட்டோர் முயன்றுள்ளனர். இதேபோல் மா.சுப்ரமணியமும் கடைசி வரை கு.க.செல்வத்துடன் தொடர்பில் இருந்து திரும்பி வந்துவிடுமாறு கூறிக் கொண்டே இருந்துள்ளார். ஆனால் கு.க.செல்வம் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.

இதனை தொடர்ந்தே ஸ்டாலினிடம் கு.க.செல்வம் பாஜக மேலிடத்தை சந்திக்க சென்றுள்ள தகவலை கூறியுள்ளனர். இதனை கேட்ட ஸ்டாலின் கடும் டென்சன் ஆனதாக சொல்கிறார்கள். அதிமுக இரண்டாக உடைந்த நிலையிலும் அந்த கட்சியில்  இருந்து சிட்டிங் எம்எல்ஏ ஒருவர் கூட நம் கட்சிக்கு வரவில்லை. செந்தில் பாலாஜி கூட முன்னாள் எம்எல்ஏவாகத்தான் இங்கு வந்தார். ஆனால் நம் கட்சியில் இருந்து சிட்டிங் எம்எல்ஏ ஒருவர் எதிர்கட்சிக்கு அதுவும் பாஜகவிற்கு செல்வதா என கொதித்துவிட்டதாக கூறுகிறார்கள்.

இதனை அடுத்து மூத்த நிர்வாகிகள் அனைவரையும் உடனடியாக அண்ணா அறிவாலயம் வருமாறு அழைத்துள்ளார் ஸ்டாலின். துரைமுருகன் உள்ளிட்டோரும் உடனடியாக வந்து சேர்ந்துள்ளனர். மாவட்டச் செயலாளர் பதவி எல்லாம் தலைமை கொடுப்பது, அது கொடுக்கவில்லை என்றால் எம்எல்ஏக்கள் வேறு கட்சிக்கு செல்வார்களா? என்று ஸ்டாலின் கேட்டுள்ளார். ஏன், செல்வம் கொஞ்சம் நாள் அமைதியாக இருக்க முடியாதா? என்கிற ரீதியில் ஸ்டாலின் பேச, இந்த விவகாரத்தை நாம் பொறுமையாகவே அணுக வேண்டும் என்று துரைமுருகன் கூறியுள்ளனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இதெல்லாம் சகஜம், ஆனால் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நிர்வாகிகள் நியமன விவகாரத்தில் அவசரம் காட்டக்கூடாது, திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் வரை அனைவரின் தயவும் நமக்கு தேவை என்கிற ரீதியில் துரைமுருகன் கூறியுள்ளார். அதோடு வேறு யார் யாரெல்லாம் அதிருப்தியில் உள்ளார்கள் என்கிற கணக்கை எடுக்குமாறும் ஸ்டாலின் கூறியதாகவும், அவர்கள் அனைவரிடமும் ஸ்டாலின் நேரடியாக பேச திட்டமிட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

மேலும் நிர்வாகிகள் நியமன விவகாரத்தில் உதயநிதி தலையீடு குறித்தும் பேச்சு வந்தது என்றும் ஸ்டாலின் அதற்கு பெரிய அளவில் ரியாக்ட் செய்யவில்லை என்றும் கூறுகிறார்கள். கலைஞர் இருந்த போது ஸ்டாலின் என்ன செய்தாரோ? அதையேத்தான் தனது தந்தைக்கு உதயநிதி செய்வதாகவும் திமுக மேலிடத்தில் சலசலப்பு நிலவுகிறது. தனது அரசியல் எதிர்காலத்திற்கு தற்போதே தான் கட்சியில் கட்டமைப்பை ஏற்படுத்துவதாகவும் இதில் என்ன தவறு என்று உதயநிதி தரப்பு கேட்பதாகவும் கூறுகிறார்கள். கு.க.செல்வம் போய்விட்டால் சென்னையில் திமுகவிற்கு வேறு ஆளே இல்லையா? என்றும் உதயநிதி தரப்பு கேட்கிறது.

ஆனால் கடந்த வாரமே  ஏசியா நெட் தமிழ் கூறியிருந்தது, திமுக நிர்வாகிகள் நியமனத்தில் உதயநிதியின் நேரடி தலையீடு சீனியர்களை குழப்பம் அடைய வைத்துள்ளது என்றும், ஏனென்றால் இனி கட்சிப் பதவி, எம்எல்ஏ சீட், எம்பி சீட்டுகளுக்கு உதயநிதியைத்தான் அணுக வேண்டும் என்றால் முதலில் இருந்து தங்கள் அரசியல் பயணத்தை ஆரம்பிக்க வேண்டுமா? என்று அவர்கள் யோசிப்பதாகவும் கூறியிருந்தோம், அதனை ஏராளமானோர் தற்போதே துவங்கிவிட்டார்களாம்.

click me!