
தமிழகமெங்கும் ஆய்வு நடத்தும் தமிழக கவர்னரை வெளிப்படையாக கடிந்து கொள்ள முடியாமல் உள்ளுக்குள் புழுங்குகிறது ஆளுங்கட்சி. இந்நிலையில் அவர்களின் பங்காளி டீமான தினகரன் அணியோ ‘தமிழகத்தில் கவர்னர் ஆட்சி வரப்போகுது’ என்று மணியடித்திருப்பது அமைச்சரவையை மண்டை காய வைத்திருக்கிறது.
தினகரன் ஆதரவாளரான மாஜி தி.மு.க. அமைச்சர் பரிதி இளம் வழுதி சமீபத்தில் ஒரு மேடையில் பேசும்போது “பெட்ரோல், டீசல் விலையை ஏத்துறாரு மோடி. பஸ் டிக்கெட் விலையை ஏத்துறாரு எடப்பாடி.
இப்ப புதுசா ஒரு மொபைல் அப்ளிகேஷன் கொண்டு வந்திருக்காங்க. அதுல பதிவு பண்ணினாக்க, வீடு தேடி டாஸ்மாக் சரக்கு பாட்டில் வந்துடுமாம். குடிமகன்கள் சங்கடப்படாமல் சரக்கடிக்கணும்னு எவ்ளோ அக்கறையெடுக்குது பாருங்க அரசாங்கம்.
நான் தி.மு.க.வுல இருந்தவந்தான். ஏன் அங்கே இருந்து வெளியில வந்தேன் தெரியுமா? அங்கே ஒருத்தர் இருக்காரு. ரொம்ப பலசாலின்னு தனக்கு நினைப்பு. அவரு இருக்குற வரைக்கும் தி.மு.க. ஜெயிக்கவே ஜெயிக்காது. அந்தாளு தொல்லை தாங்க முடியாமத்தான் வெளியில வந்துட்டேன். அவரு பதவியில இருக்குற வரைக்கும் ஒரு தேர்தல்ல கூட தி.மு.க. ஜெயிக்காது. இதைச் சொல்றதுக்கு நான் வேண்டாம். அழகிரியே போதும்!” என்று நிறுத்தியவர் பிறகு...
“நீ செயல்தலைவர்னா, உங்க அப்பா என்ன செயல்படாத தலைவரா? ஆர்.கே.நகர்ல அடிச்ச குக்கர் விசில் சத்தத்துல உன் டெபாசீட்டே காலியாயிடுச்சே. இன்னும் பொறுத்திருந்து பாருங்க அந்த கட்சி என்ன பாடெல்லாம் படப்போகுதுன்னு.
தன்னோட கார் நம்பர்ல கூட சி.எம். அப்படின்னு போட்டுகினு சுத்துறாரு எடப்பாடி. அர்த்த ராத்திரியில குடை பிடிக்காதீங்கய்யா...மொத்தமா போயிடும். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்குல தீர்ப்பு வரப்போகுது. உங்க ஆட்சி மொத்தமா கலையப்போவுது. பொதுத்தேர்தல்ல ஜெயிச்சு தினகரன் முதலமைச்சர் ஆவது உறுதி.
கவர்னர் ஆட்சி கூடிய சீக்கிரம் வரப்போவுதுன்னு சொல்லாம சொல்லத்தான் பன்வாரிலால் புரோஹித் தமிழ்நாடு முழுக்க சுத்திச் சுத்தி ஆய்வு பண்ணிட்டு இருக்கிறார்.” என்று முடிக்க, கூட்டத்தில் செம்ம விசில்.