
என்னதான் எடப்பாடியார் இந்த தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தாலும் கூட சக மற்றும் எதிர்கட்சி முக்கியஸ்தர்களின் வாயில் விழுந்து செமத்தியாகத்தான் வதைபடுகிறார்.
தமிழகத்தில் ‘முதலமைச்சர்’ எனும் பதவியின் மீது அரசியல்வாதிகள் வைத்திருந்த பயம் மற்றும் பிரம்மாண்ட பார்வை என்பது அற்றுப் போய்விட்டது என்றுதான் கூற வேண்டியிருக்கிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது ஆட்சியை விமர்சிப்பார்களே தவிர அவரை பர்ஷனலாக விமர்சித்து வீணாக எந்த வழக்கிலும் சிக்கிக் கொள்ள எதிர்கட்சியினர் தயாராக இருந்ததில்லை. அதிலும் அ.தி.மு.க.வில் கோலோச்சிவிட்டு பின் பர்ஷனல் காரணங்களுக்காக எதிர்கட்சிக்கு போனவர்கள் கூட ஜெ.,வை பர்ஷனலாய் விமர்சித்ததில்லை.
அதேபோல் கருணாநிதியையும் அப்படி பர்ஷனலாய் பெரிதாய் விமர்சித்துவிட்டு பின் அவரது வாயாலேயே பதிலடி சவுக்கடிகளை வாங்கிக் கட்டவும் விரும்ப மாட்டார்கள் எதிர்கட்சியினர். காரணம் கருணாநிதி எங்கிருந்து தங்களுக்கு எதிரான பாயிண்டுகளை பிடிக்கிறார் என்றே தெரியாது. ஆனால் சம்மட்டியடி போட்டு தாக்குவார். ஆக இருபெரும் முதல்வர்கள் மீதான அச்சம், தயக்கம், மரியாதை ஆகியன இப்படித்தான் இருந்தன.
ஆனால் தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீது எவருக்கும் பயமில்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார்கள் விமர்சகர்கள். அதற்கு உதாரணமாக அவர்கள் சுட்டிக்காட்டும் விஷயம் இதுதான்...
அதாவது சமீபத்தில் மதுரையில் நடந்த கூட்டத்தில் பேசியிருக்கிறார் தி.மு.க.வின் வி.ஐ.பி.யான செல்வகணபதி. ஒரு காலத்தில் அ.தி.மு.க.வில் கோலோச்சிய இந்த சேலத்துக்காரர் மைக்கில் “தமிழக மக்கள் இன்றைக்கு இந்த ஆட்சியால் அவதிப்படுவதற்கு நான் செய்த தவறும் ஒரு காரணம்தான். வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறுகள் இரண்டு.
ஒன்று, இன்று தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியை அன்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக்கியது. நான் அதை செய்யாமலிருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் அடையாளம் தெரியாமலே இருந்திருப்பார் இன்று வரை.
இன்னொன்று அன்று அ.தி.மு.க.வில் கட்டம் கட்டப்பட்டு கிடந்த செல்லூர் ராஜூவை மீண்டும் கழகத்தினுள் கொண்டு வந்தது. நான் அதை செய்யாமலிருந்திருந்தால் இன்று தெர்மகோல் வழியாக தமிழக மானத்தை சர்வதேச சந்தியில் சிரிக்க வைத்திருக்க மாட்டார் ராஜூ.
இந்த இரண்டு பேருக்கும் அன்று வாழ்க்கை கொடுத்து, இன்று தமிழக மக்களின் துன்பங்களுக்கு காரணமாக நான் அமைந்துவிட்டதற்காக மன்னிப்பு கேட்கிறேன் மக்களிடம்.” என்று பேசியிருக்கிறார்.
சந்தடி சாக்கில் செல்வகணபதி தனது அ.தி.மு.க. கால பெருமைகளை பீற்றியிருக்கிறார் என்று தனி கமெண்ட்ஸும் ஓடுவது சுவாரஸ்யம்.