
காவிரியிலிருந்து நீர் திறந்துவிடக் கோரி கர்நாடக முதல்வர் சித்த ராமையாவிற்கு தமிழக முதல்வர் பழனிசாமி அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால், தமிழக முதல்வரின் கோரிக்கையை நிராகரித்த சித்த ராமையா, தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை எனக்கூறி தண்ணீர் திறக்க மறுத்துவிட்டார்.
கடந்த ஆண்டே கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகள், இந்த ஆண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மிகவும் குறைந்த காரணத்தினால், டெல்டா மாவட்ட பாசனத்திற்கு போதுமான அளவு தண்ணீர் கொடுக்க இயலாத சூழ்நிலை உள்ளது.
எனவே, டெல்டா மாவட்ட சம்பா பயிரை காப்பாற்றும் நோக்கில் காவிரி நீரை திறந்துவிட கர்நாடகா அரசை வலியுறுத்துவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, துரைக்கண்ணு, ஓ.எஸ்.மணியன் ஆகிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
முதல்வர் பழனிசாமி மற்றும் டெல்டா மாவட்ட அமைச்சர்கள் பெங்களூரூ சென்று கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து, டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி சம்பா பயிரை காப்பாற்ற, காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்துவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து பேச நேரம் ஒதுக்ககோரி, கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் மற்றும் கர்நாடக முதல்வரின் முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் எழுதுவதுடன், தொலைபேசி மூலம் கேட்டுக்கொள்ளவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.