
தொகுதி வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார் என தொழிற்துறை அமைச்சர் சம்பத் மீது பண்ருட்டி எம்எல்ஏ புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் மீது மாவட்ட ஆட்சியரிடம் பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும், அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்த வண்ணம் உள்ளது.
இதனால் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொள்ளும் அரசு விழாக்களில் எம்.எல்.ஏ.க்கள் சத்தியா பன்னீர்செல்வம் (பண்ருட்டி), பாண்டியன் (சிதம்பரம்), முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்), கலைச்செல்வன் (விருத்தா சலம்) ஆகியோர் தொடர்ந்து புறக்கணித்து வந்தனர்.
அமைச்சர் சம்பத் எங்களை மதிப்பதில்லை என்றும், தொகுதிக்கு அரசு நலத்திட்டங்கள் வரவிடாமல் தடுக்கிறார் என்றும் புகார் கூறினர். அமைச்சர் சம்பத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
அமைச்சர் சம்பத் தற்போது தொழிற்துறை அமைச்சராக இருந்து வருகிறார். கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், தொகுதி வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார் என தொழிற்துறை அமைச்சர் சம்பத் மீது பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் புகார் மனு தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சரியாக மதிப்பதில்லை எனவும் திட்டங்களை நிறைவேற்றவிடாமல் தடுக்கிறார் எனவும் குற்றம் சாட்டினார்.
மேலும் எடப்பாடியும் பன்னீரும் எம்.சி.சம்பத்துக்கு அறிவுரை கூறி கண்டித்து வைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.