
பிரதமர் நரேந்திர மோடி, கடவுள் கிருஷ்ணரின் அவதாரம் என்றும், 2019 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மோடியின் ஆட்சியே தொடரும் என்றும் ராஜஸ்தான் எம்.எல்.ஏ. கியான் தேவ் அகுஜா கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ராம்கர் தொகுதி பாஜக எம்.எல்ஏ கியான்தேவ் அகுஜா, பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி கடவுள் கிருஷ்ணரின் அவதாரம் என்றார். மோடி தனித்திறமை வாய்ந்தவர். அதனாலேயே அவர் மற்றவர்களிடம் இருந்து தனித்து தெரிவதாக கியான்தேவ் கூறினார்.
மோடியின் எண்ணங்கள், செயல்பாடுகள், நாட்டு மக்களுக்கு தற்போது கசப்புணர்வை தந்தாலும், எதிர்காலத்தில், நாடும், நாட்டு மக்களும் சிறந்த பலனை அறுவடை செய்யப்போகிறார்கள் என்றார்.
மோடியின் இந்த தொலைநோக்கு நல்லெண்ணம் கொண்ட பார்வையால், 2019 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, நல்லாட்சியை தொடர்வார்.
பிரதமர் மோடி, டிமானிடைசேஷன், ஜி.எஸ்.டி., ஜன் தன் திட்டம் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு திட்டங்களால் மக்களின் மனதில் நீங்கா வண்ணம் இடம் பிடித்துள்ளார் என்றும் கியான்தேவ் கூறினார்.