
தமிழக அமைச்சரவையில், மனதில் பட்டதை மரத்தில் ஆணியடிச்சா மாதிரி கில்லியாக சொல்ல மந்திரி ‘செல்லூர்’ ராஜூவை விட்டால் வேறு யார்? இருக்கிறார்கள்!
தினகரனின் வெற்றி, தமிழக அரசியலில் பா.ஜ.க.வின் ஆதிக்கம் ஆகியவற்றை பற்றி தனது தெறி வார்த்தைகளில் தட்டி எறிந்திருக்கிறார் மனிதர் இப்போது.
அதில் ஹைலைட்டான விஷயங்கள் இதோ...
“தினகரன் வெற்றி பெற்றதை விரும்புறீங்கதானே!?ன்னு என்னைப்பார்த்து கேட்கிறாங்க. அதெப்படி சொல்லிட முடியும்? எப்படியிருந்தாலும் தினகரனோட வெற்றி தற்காலிக வெற்றிதான். அதேநேரத்துல இரட்டை இலையும் சோடை போகலை.
ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம்! அதாவது தினகரன் வெற்றி பெறக்காரணாமே ஸ்டாலின் தான். தி.மு.க.வுக்கு போக வேண்டிய சிறுபான்மை வாக்குகள் தினகரனுக்குதானே போயிருக்குது!
இந்த நேரத்துல நான் இன்னொன்னும் சொல்லிக்குறேன். அதாவது, மத்தியில ஆளும் பி.ஜே.பி. ஒரு மதவாத கட்சிதான். இதுல எந்த சந்தேகமுமில்லை. அந்த கட்சி கூட அ.தி.மு.க. எந்த காலத்துலேயும் கூட்டணி வைக்காது. அப்படியொரு நிலை வர இந்த செல்லூர் ராஜூ விடமாட்டான்.
மத்திய அரசு கூட இணக்கமா இருக்கிறதாலே அதை கூட்டணின்னு நினைச்சுக்காதீங்க. கூட்டணிங்கிறதே வேற! தமிழக மக்கள் நலனுக்காக நாங்க பி.ஜே.பி. முக்கியஸ்தர்கள் கூட பேச்சுவார்த்தை நடத்துறோம். உடனே அதுக்காக அவங்களுக்கு அடிமையா இருக்கோம், கூட்டணி வைக்கப்போறோன்னு நினைக்கக் கூடாது. தப்பா நினைக்கிறவங்க ஆயிரம் பேசுவாங்க, அதை அப்படியே நம்பிடக்கூடாது.” என்றவர் அடுத்து ஓ.பி.எஸ்.ஸுக்கு வெச்சார் செம்ம வேட்டு.
அதாவது “தினகரனை சந்திக்கும் முன் சாதாரண பொறுப்பில்தான் கட்சியிலிருந்தார் ஓ.பி.எஸ். தினகரனாலேதான் அவருக்கு வாழ்க்கை கிடைச்சுது. எம்.பி. தேர்தல்ல தினகரன் நின்னப்ப, பன்னீர்செல்வம் வீட்டில் தங்கித்தான் பிரச்சார வேலைகளை பார்த்தார். அந்த அடிப்படையில் தினகரனாகதான் பன்னீரின் கைகளை தூக்கிவிட்டார்.
என்னை ஸ்லீப்பர் செல், ஸ்லீப்பர் செல்லுன்னு சிலர் பேசுறதா தகவல் வருது! எவன் அப்படி சொல்லிட்டு இருக்குறது?” என்று கடுப்போடு முடித்திருக்கிறார்.