
ஆர்.கே.நகர் பல விதங்களில் அரசியல் மட்டத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. ஆர்கே.நகரில் தோற்றதற்குப் பின்னர், அதிமுக., மட்டுமல்ல, திமுக., உள்ளிட்ட கட்சிகளும் தங்கள் தோல்வி குறித்து சுய பரிசோதனை செய்துகொண்டுள்ளன. ஏன் இப்படி டெபாசிட் இழந்து படு தோல்வியை சந்தித்தோம் என்று திமுக., கூட்டம் போட்டு விவாதித்தது. இந்நிலையில், திமுக.,வில் இருந்து மீண்டும் ஒரு பழைய குரல் செயல் தலைமைக்கு எதிராக எழுந்தது. அது அழகிரியின் குரல்.
அதிமுக.,வுக்கு ஒரு தினகரன் என்றால், திமுக.,வுகு ஒரு அழகிரி என்ற நிலையில் இது வெளித் தெரிந்தது. ஆனால், அதிமுக,.வுக்கு இருக்கும் பிரச்னை வேறு விதமானது. கட்சிக்குள் களை எடுக்க வேண்டிய நிலையில் அக்கட்சி இருக்கிறது. இதைத்தான் துவக்கத்தில் இருந்தே அதிமுக., அனுதாபியான பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காத விரக்தியில் அவர் ஒரு கருத்தைச் சொல்ல அது பெரிய அளவில் அரசியல் மட்டத்தில் விவாதப் பொருளானது.
இந்நிலையில், அதிமுக.,வில் ஐந்தாம்படையாக செயல்பட்ட சிலரை அக்கட்சி நீக்கியது. இப்போதும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்ல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. அணி மிகவும் வலுவான அணியாகத்தான் உள்ளது. தமிழக ஆட்சியும் அ.தி.மு.க. கட்சியும் இவர்களிடம் உள்ளது என்றாலும், இதனை ஆட்டம் காணச் செய்ய ஸ்லீப்பர் செல்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, டிடிவி தினகரன் மிரட்டி வருகிறார்.
ஓபிஎஸ் இபிஎஸ் என இவர்கள் இருவருக்கும் எதிராக, சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் உள்ளனர். சசிகலா சிறையில் இருப்பதால் டி.டி. வி.தினகரன் அந்த அணியை வழி நடத்தி வருகிறார். இந்த அணியில்தான் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சில எம்.பி.க்களும் தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளில் சிலர் தினகரனை ஆதரித்து வருகிறார்கள்.
குறிப்பாக, ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிக்குப் பின்னர், அதிமுக.,வில் பெரும் சலசலப்பு எழுந்துள்ளது. முன்பே அதிமுக.,வில் களை எடுக்கப் பட்டிருந்தால், ஆர்.கே.நகரை வென்றிருக்கலாம் என்ற கருத்து அதிமுக.,வில் எதிரொலிக்கத் தொடங்கிய வேளையில்தான், அதிமுக, பெருந்தலைகள் விழித்துக் கொண்டார்கள். குறிப்பாக, டி.டி.வி.தினகரன் கை சற்று ஓங்கத் தொடங்கியதும், 6 அமைச்சர்கள், 30 எம்.எல்.ஏ.க்கள் அவரை ரகசியமாகத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. வில் இருந்து தினகரன் ஆதரவாளர்களை ஓரம் கட்டும் நடவடிக்கைகளை எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாக, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல். ஏ.க்கள், நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.
பின்னர் வியாழக்கிழமை நேற்று 44 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், பெரிய அளவில் வெள்ளிக்கிழமை இன்று அதிமுக.,வில் தினகரன் ஆதரவாளர்கள் 164 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது. இவர்கள் அனைவரும் திருப்பூர், புதுக்கோட்டை, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தினகரன் ஆதரவாளர்கள்.
இன்னும் தீவிர களை எடுப்பு அதிமுக.,வில் இருக்கும் என்று கூறப்படும் நிலையில், தற்போது கிலி பிடித்துக் கொண்டுள்ள பாஜக.,வும் சற்றே விழித்துக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
பாஜக.,வுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டப் பெயர், மிஸ்ட் கால் பார்ட்டி என்பதுதான்! மிஸ்ட் கால் கொடுத்து கட்சியில் உறுப்பினராகச் சேரலாம் என்ற திட்டத்தின் மூலம் பலர் பாஜக.,வில் உறுப்பினராக உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. ஆனால், அந்த உறுப்பினர்களால் ஓட்டு அளிக்கக் கூட முடியுமா என்பது அக்கட்சியின் முன்னுள்ள சவால். அப்படி இல்லாதிருந்தால், நோட்டாவுக்குப் போட்டி போட்டு, ஆர்.கே.நகரில் படுதோல்வியை சந்தித்திருக்காது அக்கட்சி.
காரணம், இருபது ஆண்டுகளுக்கு முன்பே, எந்த வித அடித்தளமும் பெரிதாக இல்லாமல், குமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் வேலாயுதம் என்ற எம்.எல்.ஏ., தனி ஆளாக நின்று வெற்றி பெற்று வந்தார். ஆனால் அதன் பின்னர் கூட்டணிகள் சேர்ந்து பின்னர் தனித்து விடப்பட்டு, கட்சி என்னவோ தமிழகத்தில் மட்டும் அடிமட்டத்திலேயே நின்று போனது.
ஆனால், அக்கட்சிக்குள்ளும் உட்கட்சிக் குழப்பங்களை பலர் பல விதங்களில் ஏற்படுத்தி வந்துள்ளனர். இருப்பது நான்கு பேராக இருந்தாலும், அவர்களுக்குள்ளும் அரசியல். இந்த நிலையில், வெகு நாட்களாக கட்சியில் பலர் சொல்லி வந்தும், தலைமை செவிமடுக்காமல், இப்போது திடீரென விழித்துக் கொண்டு, கட்சியில் இருந்து இருவரை நீக்கியுள்ளது.
அவர்களில் ஒருவர், மாநில பாஜக.,வின் தூத்துக்குடி பகுதி பொருளாளராக இருந்த பாலசுப்பிரமணிய ஆதித்தன் என்பவர். இவர், சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய விதத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனையும் வானதி சீனிவாசன் குறித்தும் அவதூறாகக் கருத்துகளை எழுதி வந்தவர் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஒருமுறை பொன்.ராதாகிருஷ்ணனும் வானதி சீனிவாசனும் கட்சியினருடன் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது, அவர்களுக்கு கோயிலில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டதாம். அந்த நிலையில், வெளியில் செய்தியாளர்களிடம் வந்து பேட்டி அளித்துள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன். அருகில் வானதியும் கட்சியினரும் நின்றிருந்த நிலையில், அந்தப் புகைப்படத்தை வேறு மாதிரியாக சித்திரித்து, பேஸ்புக்கில் பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவதூறு பரப்பினார் என்று குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், கட்சிக்குள் சாதி ரீதியான பிரிவினைக் கருத்துகளை விதைத்து குழப்பத்தை ஏற்படுத்தினார் என்று கூறப்படுகிறது. இவை எல்லாம் முன்பே தெரிந்திருந்தும், கட்சிக்குள் இருக்கும் ஓரிரு தலைவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு, குழு அரசியல் முன்னெடுக்கப் பட்டதாம்,. இதனால் இப்போது தோல்விகள் துரத்தியதன் பின்னணியில், திடீரென முழித்துக் கொண்டு, அதிமுக., பாணியில் கட்சியில் இருந்து இருவரை நீக்கியுள்ளார் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். மதுரையைச் சேர்ந்த டி.எஸ்.சங்கரநாராயணன் என்பவரையும், பாலசுப்பிரமணிய ஆதித்தனையும் கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் தமிழிசை.
ஒருபுறம் பெரிய கட்சியான அதிமுக.,வை கபளீகரம் செய்ய புயலாய்ப் புறப்பட்டு வந்துவிட்டார் தினகரன். இன்னொரு புறம் இருபது வருடங்களுக்கு முன்னர் இருந்த வளர்ச்சியைக் கூட கண்டிராமல் தேய்ந்து வரும் பாஜக.,வை மேலும் தேய்த்துவிட அக்கட்சிக்குள் ஊடுருவியிருக்கிறார்கள் வேற்றுக் கட்சியினர். இந்த இரண்டு சூழ்நிலைகளையும் இரு கட்சிகளும் எப்படி எதிர்கொள்கின்றன என்பதைப் பொறுத்துதான், அக்கட்சிகளின் எதிர்காலம் தமிழகத்தில் தீர்மானிக்கப்படும்!