
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் அக்கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 40707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளுங்கட்சியான அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி தினகரன் அபார வெற்றி பெற்றார். வாழ்வா சாவா போட்டியில் அதிமுகவை வீழ்த்தி அரசியல் இருப்பை உறுதி செய்துள்ளார் தினகரன்.
ஆனால் ஆர்.கே.நகரில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மருதுகணேஷ் டெபாசிட் கூட வாங்காமால் தோல்வியுற்றார்.
அதிமுக அரசு, மத்திய பாஜக அரசு, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் பல்வேறு நெருக்கடிகளையும் மீறி அபார வெற்றி பெற்ற தினகரனுக்கு, அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலரும் அமைச்சர்கள் சிலரும் வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
இதைதொடர்ந்து இன்று ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவாக டிடிவி தினகரன் பொறுப்பேற்றார். இந்நிலையில், வரும் ஜனவரி 8 ஆம் தேதி சட்டசபை கூடுகிறது. இதனால் இன்று திமுக உயர்நிலைக்குழு கூட்டம் அன்பழகன் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
இதில், திமுக செயல்தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், தயாநிதிமாறன், மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், சட்டசபை கூட்டுவது குறித்தும் ஆர்.கே.நகரில் தோல்வியடைந்தது குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது.