
கடந்த டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். இதையடுத்து ஒ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
அதிமுக பொது செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார். பின்னர், முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒ.பி.எஸ். பிரிந்து சென்றார். அவருக்கு ஆதரவு தெரிவித்து மூத்த நிர்வாகி மதுசூதனன்,
முன்னாள் அமைச்சர்கள் மைத்ரேயன், பி.எச்.பாண்டியன் மற்றும் 12 எம்பிக்கள், சில எம்எல்ஏக்கள் உள்பட சசிகலாவிடம் இருந்து பிரிந்துஒ.பி.எஸ். அணிக்கு சென்றனர்.
இதனால், அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இதனால் தமிழகத்தில் ஆட்சி நடத்துவது ஸ்தம்பித்து நின்றது.
அதிமுக இரு அணியாக உள்ளதால், மக்கள் யாருக்கு ஆதரவு தருவார்கள் என்ற கேள்வி எழுந்தது.
இதற்கிடையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்பட 3 பேருக்கு 4 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம் விதித்தது.
மேலும் இன்று மாலைக்குள் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானவுடன், கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்த சசிகலா, எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டினார்.
அதில் அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இது தொடர்பான கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
இதைதொடர்ந்து, நேற்று மாலை எடப்பாடி பழனிச்சாமி. கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தையும், ஆதரவு எம்எல்ஏக்களின் பட்டியலையும் அளித்தார். மேலும், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி உரிமை கோரினார். இதேபோல், ஓபிஎஸ் சார்பில் நேற்று இரவு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு, கவர்னருக்கு கோரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில், ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரில் யாருக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பதை முடிவு செய்ய சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை ஒரு வாரத்தில் கூட்டலாம் என கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆலோசனை வழங்கினார்.
ஆகவே, பெரும்பான்மை பலம் உள்ளதாக தான் கருதும் ஏதேனும் ஒரு அணியை ஆட்சி அமைக்கவோ அல்லது யாருக்கு பெரும்பான்மை பலம் என்பதை நிரூபிக்க சட்டமன்ற கூட்டத்தை கூட்டுவது பற்றியோ கவர்னர் விரைவில் முடிவெடுத்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.