
’ஆள சித்த நாள் ஃப்ரீயா விடுங்கப்பே’ என்று தேனி பாஷையில் பேசியபடி கோவை சென்றிருக்கிறார் பன்னீர் செல்வம். அங்கிருக்கும் தன்வந்திரி ஆர்ய வைத்திய சாலை மருத்துவமனையில் மூன்று நாட்கள் அவருக்கு ஆயுர்வேத புத்துணர்வு சிகிச்சை அளிக்கப்படுவதாக தற்போதைய தகவல்கள் சொல்கின்றன.
புத்துணர்வு பெறும் அளவுக்கு என்னாச்சு பன்னீருக்கு?
கொஞ்சம் இறங்கி விசாரித்தால்...பன்னீரு இயல்பாகவே உடல் நலத்தில் அக்கறையான மனிதர்தானாம். உடம்புக்கு தோதான விஷயங்களை மட்டும் பார்த்து பக்குவமா சாப்பிடக்கூடியவரு. ஆனாலும் மனப்பிரச்னையும் உடம்பை பாதிக்கும்தானே! ஜெ., அப்பல்லோவில் அட்மிட் ஆனதிலிருந்தே பல வகையான நெருக்கடியால் மன உளைச்சலில் இருந்திருக்கிறார் பன்னீர்.
ஜெ., மறைவிற்கு பின் நடந்து கொண்டிருக்கும் விஷயங்களால் மன அலைக்கழிப்பின் உச்சத்திற்கு சென்றிருக்கிறார். நேரத்துக்கு சாப்பிட்டுவிட்டாலும் கூட தூக்கமின்மை, ஆதங்க உணர்வு, எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், அரசியல் காட்டாறு தன்னை எங்குவரை இழுத்துப்போகுமோ? என்கிற சிறு பய உணர்வு எல்லாம் கலந்து அவரது உடலின் சில பாகங்களை பாதித்திருக்கிறதாம்.
அதிலும் ஜெ., சமாதி தியானத்தின் மூலம் உச்சத்துக்கு சென்ற அவரது செல்வாக்கு சமீப காலமாக சடசடவென சரிந்து வருவதை ஒரு சர்வே சுட்டிக்காட்ட, ரொம்பவே மனசு விட்டுப்போயிருக்கிறார் பன்னீர்.
அதையெல்லாம் சீராக்கவே இங்கே வந்திருக்கிறார் என்று தகவல். சென்னையில் பெரும் மருத்துவமனைகள் பன்னீருக்கு பழக்கமாக இருந்தாலும் கூட அவர் இயற்கை ரீதியிலான சிகிச்சையையே விரும்புகிறாராம்.
எனவேதான் ஆயுர்வேதிக் சிகிச்சைக்காக கோவையில் ஐக்கியமாகியிருக்கிறார்.
மனபிரச்னை உடலில் நோயை கொண்டு வரும் அதே நேரத்தில் உடல் நோயை மட்டும் தீர்த்துவிட்டால் மன சஞ்சலங்கள் போய்விடாது. அதனால் படபடப்பு, கவலை ஆகியவை போகும் வகையில் தியானம், எண்ணெய் பிளிச்சல், மசாஜ், ஆயுர்வேத குளியல் என்று பல கட்டங்களாக சிகிச்சைகள் வழங்கப்படும் என்கிறார்கள்.
ஆக மொத்தத்தில் பன்னீரை புத்துணர்வாக்குவதற்காக பெண்டு கழட்டப்போகிறார்கள் என்றே தெரிகிறது.
புத்துணர்வோடு வரும் பன்னீருக்கு என்ன புது ஷாக் தரலாம் என்று இப்போதே ஆலோசனையில் ஆழ்ந்துவிட்டது எடப்பாடி டீம்.
சித்தப்பு சூது எங்களுக்கும் தெரியுமுல்ல!