எனக்கு 19 வயதானபோது தினகரன் எல்.கே.ஜி!! ஊட்டி மக்களுக்கு தனது ஃப்ளாஸ்பேக்கை ஓட்டி காட்டிய ஓபிஎஸ்..!

First Published Dec 30, 2017, 1:58 PM IST
Highlights
panneerselvam speak about his political life


அதிமுகவில் எனக்கு 19 வயதானபோதுதான் தினகரன் எல்.கே.ஜியில் சேர்ந்தார் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் தினகரனை விளாசியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் தொடங்கிய பனிப்போர், ஓராண்டுக்கும் மேலாக முடிவில்லாமல் நீடித்துவருகிறது. தினகரன் மற்றும் ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பில் பரஸ்பரம் துரோகிகள் என குற்றம்சாட்டிவருகின்றனர்.

ஓபிஎஸ்-இபிஎஸ்சை கடுமையாக விமர்சிக்கும் தினகரனும் அவரது ஆதரவாளர்களும் பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவிடம் அறிமுகம் செய்துவைத்ததே தினகரன் தான் என கூறிவருகின்றனர். இதற்கு ஏற்கனவே பதிலளித்த பன்னீர்செல்வம், ஊட்டியில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிலும் பதிலளித்தார்.

ஊட்டியில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், என்னை ஜெயலலிதாவிடம் அறிமுகம் செய்துவைத்ததாக தினகரன் கூறிவருகிறார். 1980ல் பெரியகுளம் வார்டு பிரதிநிதியாக அரசியல் பயணத்தை தொடங்கிய நான், பெரியகுளர் வார்டு செயலாளர், பெரியகுளம் எம்ஜிஆர் மன்ற இளைஞரணி துணை செயலாளர், பின்னர் செயலாளர், பெரியகுளம் நகர்மன்ற துணைத்தலைவர், நகர்மன்ற தலைவர் என படிப்படியாக உயர்ந்த என்னை, 2001ல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வைத்து எம்.எல்.ஏ ஆக்கிய ஜெயலலிதா, அவருக்கு சோதனை வந்த சமயங்களில் எல்லாம் என்னை முதல்வராக்கினார். 1980லிருந்து நான் அதிமுகவில் இருக்கிறேன். ஆனால், 1999ல் தான் தினகரன் பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட பெரியகுளம் வருகிறார். அந்த வகையில் தினகரனை விட 19 ஆண்டுகள் நான் கட்சியில் சீனியர். அதிமுகவில் எனக்கு 19 வயதானபோதுதான் தினகரன் எல்.கே.ஜியில் சேர்ந்தார். ஆனால் தற்போது அவர்தான் என்னை ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தியதாக கூறுகிறார்.

தினகரன் 2008ல் கட்சியிலிருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர். சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் கட்சியிலிருந்து ஜெயலலிதா நீக்கினார். பின்னர், மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் சசிகலாவை மட்டும்தான் கட்சியில் சேர்த்துக்கொண்டார். குடும்ப அரசியலை விரும்பாத எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வழியில் கட்சியும் ஆட்சியும் சிறப்பாக நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என பன்னீர்செல்வம் பேசினார்.
 

click me!