
பாஜகவின் கிளைக்கட்சிதான் அதிமுக என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக, மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையிலேயே பல்வேறு சம்பவங்களும் அரங்கேறின.
தழிழகத்தில் யார் முதல்வராக வேண்டும் என்பதில் தொடங்கி அதிமுகவை யார் வழிநடத்த வேண்டும் என்பதுவரை அனைத்தையுமே பாஜக தலைமை தீர்மானிப்பதாக எழுந்த விமர்சனங்களை உறுதிப்படுத்தும் வகையில்தான் நிகழ்வுகள் அமைந்தன. இவ்வாறு, அதிமுக என்ற கட்சியிலும் தமிழகத்தின் ஆட்சியிலும் மறைமுகமாக பாஜக ஆதிக்கம் செலுத்துவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு, இடைத்தேர்தல் அறிவிப்பு என அனைத்துமே எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்துவதாகவே இருந்தன.
மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக செயல்படுகிறதே தவிர, அடிபணிந்து செல்லவில்லை என ஆட்சியாளர்கள் விளக்கமளித்தனர்.
ஆனால், ஆர்.கே.நகரின் தோல்விக்குப் பிறகு அதிமுகவின் நிலைப்பாட்டில் குழப்பம் உருவாகியுள்ளது. பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டதுதான் ஆர்.கே.நகரில் தோற்றோம். இனிமேல் பாஜகவுடன் ஒட்டும் கிடையாது. உறவும் கிடையாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். ஆனால், அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்துக்கு முற்றிலும் முரணாக, பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
இப்படியாக பாஜகவுடனான உறவு தொடர்பாக வழக்கம்போல அமைச்சர்கள், முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை பேசிவருகின்றனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அதிமுக என்பது பாஜகவின் கிளைக்கட்சி. அதிமுகவின் இரு அணிகளை சேர்த்து வைத்ததே பாஜகதான் என்பது நாடறிந்த விஷயம். பெரும்பான்மை இல்லாத அதிமுக அரசு நீடிப்பதே பாஜக உடனான கூட்டணிதான் காரணம். ஆனால் மக்களின் கவனத்தை திசைதிருப்பவே பாஜகவுடன் கூட்டணி கிடையாது என ஆட்சியாளர்கள் கூறுகின்றனர் என ஸ்டாலின் தாக்கி பேசினார்.