
என்னை புகழ்ந்தும், பாராட்டியும் பேச வேண்டாம் எனவும் அனைத்து பாராட்டுக்களுக்கும் உரியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மட்டுமே எனவும் சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு மற்றும், ஓகி புயலால் உயிரிழந்தவர்களுக்கும் நாளை சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என தனபால் தெரிவித்தார்.
வரும் 10 மற்றும் 11-ம் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீதான விவாதம் நடைபெறும் என்றும் தனபால் கூறினார். அதைத் தொடர்ந்து 12-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலுரை ஆற்றுவார் எனவும் குறிப்பிட்டார்.
அதன்படி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.
இதையடுத்து கேள்விநேரத்தில், ஜல்லிக்கட்டு நாயகன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் என கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பாராட்டு தெரிவித்தார்.
அப்போது அவை முன்னவரும் துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் என்னை புகழ்ந்தும், பாராட்டியும் பேச வேண்டாம் என அதிமுக எம்எல்ஏக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அனைத்து பாராட்டுக்களுக்கும் உரியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மட்டுமே என தெரிவித்தார்.