
தினகரன் எம்.எல்.ஏ ஆனது செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான அதிமுக வேட்பாளரை 40707 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தினகரன் அபார வெற்றி பெற்றார். ஹவாலா முறையில் பணப்பட்டுவாடா செய்தே தினகரன் வெற்றி பெற்றதாக ஆளும் அதிமுகவும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின.
பணப்பட்டுவாடா செய்து வெற்றி பெற்ற தினகரனின் வெற்றி, செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னையை சேர்ந்த ராமமூர்த்தி என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், சுயேட்சையாக போட்டியிட்டு ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற தினகரன், பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றிருக்க முடியாது. ஆர்.கே.நகரில் அதிகளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையமும் தெரிவித்துள்ளது. எனவே தினகரனின் வெற்றி செல்லாது என அறிவித்து அவர் எம்.எல்.ஏவாக செயல்பட தடைவிதிக்க வேண்டும். அவர் சட்டசபைக்குள் செல்லவும் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.
அந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தல் முடிவு வெளியான பின் அதை நிறுத்திவைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என கூறி தினகரனின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.