
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் 6வது நாளாக தீவிரமடைந்து வரும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார்.
போக்குவரத்து ஊழியர்களின் ஊதியத்தை 2.57 மடங்கு உயர்த்த வேண்டும், நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களை முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 6வது நாளாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்பதில் தொழிற்சங்கங்கள் உறுதியாக இருக்கின்றன. 6வது நாளாக இன்றும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்கிறது.
போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக தொழிலாளர்கள் இன்று குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே வேலைநிறுத்தம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போராட்டத்தை கைவிட்டு ஊழியர்கள் இன்று பணிக்கு திரும்பிவிட்டால் அவர்களுக்கு எந்த பிரச்னையும் கிடையாது. இன்று பணிக்கு திரும்பவில்லை எனில், அவர்கள் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
ஆனால், நீதிமன்றம், அரசு ஆகியவற்றின் மிரட்டலுக்கோ எச்சரிக்கைக்கோ பயப்படும் அளவில் ஊழியர்கள் இல்லை என்பது உறுதியான அவர்களின் நிலைப்பாட்டின் மூலம் தெரிகிறது.
இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார்.