
எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும், அதில் நேரடியாகவோ மறைமுகமாகவோ டெல்டா மாவட்ட பிரமுகர்களின் ஆதிக்கம் இருந்து கொண்டுதான் இருக்கும்.
எம்.ஜி.ஆர் இலங்கையில் பிறந்தாலும், கும்பகோணத்தில் வளர்ந்தவர். கருணாநிதி திருவாரூரில் பிறந்தவர். ஜெயலலிதா ஆட்சியில் கோலோச்சிய சசிகலாவும் டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவரே. ஆனால், சசிகலா குடும்ப ஆதிக்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த வெறுப்பு காரணமாக, மன்னார்குடியில் கூட அதிமுகவால் வெற்றி பெறமுடியாமல் போய்விட்டது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலா மீதான வெறுப்பு தமிழகம் முழுவதும் எதிரொலித்தாலும், டெல்டா மாவட்டங்களில் அதைவிட கூடுதலாக எதிரொலிக்கிறது. ஆனால், அது பெரிய அளவில் வெளியில் தெரியாமல் உள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லும் பன்னீருக்கு ஆதரவாக அதிமுக தொண்டர்களும், பொது மக்களும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
சசிகலா எதிர்ப்பு நிலைப்பாட்டை கையில் எடுத்த ஒரே காரணமாகவே, பன்னீருக்கு மக்கள் செல்வாக்கு தொடர்ந்து பெருகி வருகிறது என்று, முதல்வர் எடப்பாடி, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ க்களிடம் வெளிப்படையாகவே கூறி விட்டார். இதை மெய்ப்பிக்கும் வகையில், பன்னீர் எங்கு சென்றாலும், அவர் வருவதை அறிந்தால், அங்கு மக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்து விடுகிறது.
சிலநாட்களுக்கு முன்பு, நாகை கூட்டத்தில் பங்கேற்க வந்த பன்னீருக்கு, புதுக்கோட்டையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு, மக்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். அதேபோல் நேற்று, தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில், கட்சி பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பன்னீர் தஞ்சை மாவட்டத்திற்கு சென்றார்.
அப்போது, தஞ்சை மாவட்ட எல்லைப் பகுதியான செங்கிப்பட்டி தொடங்கி வல்லம், மருத்துவக் கல்லூரி, பசுபதி கோயில் என வரும் வழி நெடுக சாலையின் இரு புறங்களிலும் நின்று தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் முதல்வராக இருந்தபோது கூட இப்படி ஒரு வரவேற்பையும், மக்கள் எழுச்சியையும் பார்க்கவில்லை என்ற அளவிற்கு கிடைத்த வரவேற்பால், திக்குமுக்காடி போனார் பன்னீர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள, மக்கள் கூட்டத்தை கடப்பதற்குள் அவருக்கு பெரும்பாடாகி விட்டது. வருங்கால முதல்வரே, அதிமுகவின் தலைவரே என்றெல்லாம் முழங்கி தொண்டர்கள் பன்னீரை ஏகத்துக்கும் உற்சாகப்படுத்தி விட்டனர்.
இதையடுத்து, வரும் 28 ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, மீண்டும் தஞ்சை செல்லும் பன்னீரை அசத்தும் அளவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க, அம்மாவட்ட நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். அத்துடன், மற்றொரு அமைப்பில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள், பன்னீர் முன்னிலையில் அவரது அணியில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
டெல்டா மாவட்டங்களில் தமக்கான ஆதரவை பார்த்து மெய்சிலிர்த்து போன பன்னீர், சசிகலா குடும்பத்தின் கோட்டை என்று சொல்லப்படும் டெல்டா மாவட்டங்களில் இனி தமது கொடியே வானுயர பறக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அதற்காக இனி, டெல்டா மாவட்டங்களுக்கு அடிக்கடி விசிட் அடித்து, கட்சியை பலப்படுத்துவதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.