தீபா மீதான பயத்தால் உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைப்பு – கொக்கரிக்கும் ஆதரவாளர்கள்…!!!

First Published Feb 2, 2017, 12:42 PM IST
Highlights


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், அவரது தோழி சசிகலா அதிமுக பொது செயலாளராக பொறுப்பேற்றார். இதில் அதிமுக தொண்டர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதனால், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு வரவேண்டும் என அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தினர். மேலும், அவருக்கு ஆதரவாக போஸ்டர்கள், பேனர்கள், கட்அவுட்கள் வைத்து வருகின்றனர். இதைதொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் தீபா பேரவை தொடங்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதி காரமடையில் முதன் முதலாக ஜெ.தீபா பேரவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் அலுவலகத் திறப்பு விழா நடந்தது.


பொறுப்பாளர்கள் எம்.ஆர் .கோவிந்தராஜ் ,எம்.சுப்பிரமணி, பி.ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வி.ஜீவானந்தம் வரவேற்றார் . முன்னாள் எம்.எல்.ஏ.வும், கோவை மாநகராட்சி முன்னாள் மேயருமான மலரவன் தலைமை தாங்கி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:-

மறைந்த முதலவர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியல் அறிவியல் படித்தவா. அவர் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். இதனால், தீபாவுக்கு மற்ற கட்சியினரைவிட, அதிமுக தொண்டர்களிடம் அதிகமாகவே ஆதரவு பெருகி வருகிறது. மக்களின் ஆதரவும் பெருகி கொண்டே இருக்கிறது.

தமிழக மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளதால், தற்போது உள்ள அதிமுக தலைமைக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். அவரை காண தினமும் தீபா வீட்டின் முன் குவிந்துள்ளனர். இதனாலேயே ஆட்சியாளர்கள், உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைத்துவிட்டனர். இதுவே தீபாவின் வெற்றிக்கு முதல் படியாக அமைந்துவிட்டது. இதனால், தீபாவின் ஆதரவாளர்களான நாங்கள் சந்தோஷத்தில் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்.எல்.ஏ மா.பா.ரோகிணி மற்றும் அதிமுக நிர்வாகிகள், காரமடை பேரூராட்சி பேரவை பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

click me!