
தனிப்பட்ட முறையில் யாரும், யாரையும் கட்சியில் இருந்து நீக்க முடியாது என்றும் தொண்டர்களை யாரும் குழப்ப முடியாது என்றும் டிடிவி தினகரன் ஆதரவாளரான பழனியப்பன் கூறினார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பின்னர், டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் பேசும்போது, தர்ம யுத்தம் என்று கூறி ஆட்சிக்கு எதிரான முறையிலே நடத்தி வருகிறார்கள். மறைந்த ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று சொல்வதில் நா கூசுகிறது.
ஜெ. மரணத்தில் மர்ம மரணம் என்று கூறுவது வருந்தத்தக்கது. புரட்சி தலைவியால் வந்தது இந்த இயக்கம். புரட்சி தலைவி அம்மாவுடைய ஆட்சி நடக்க வேண்டும் என்பது எங்கள் ஆவல்.
அம்மாவின் ஆட்சி நடைபெறுகிறதா? இல்லையா? என்பதை நீங்கள்தான் சொல்ல வண்டும். பொதுக்குழுவால் பொது செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக தொண்டர்களை யாரும் ஏமாற்ற முடியாது.
பின்னர், பேசிய முன்னாள் அமைச்சர் பழனியப்பன், தனிப்பட்ட முறையில் யாரும், யாரையும் கட்சியில் இருந்து நீக்க முடியாது. தொண்டர்களை யாரும் குழப்ப முடியாது. தொண்டர்கள் நினைப்பதை நிறைவேற்றுவதுதான் உண்மையான இணைப்பு என்று பழனியப்பன் கூறினார்.