
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடி தமிழக அரசை பல விவகாரங்களில் விமர்சித்துவரும் நிலையில், மக்களின் நலனுக்கான மற்றும் சிறந்த அரசு என்பதை பறைசாற்றும் வகையில், முதல்வர் பழனிசாமி சட்டமன்றத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஸ்டெர்லைட், காவிரி, நீட் தேர்வு ஆகிய விவகாரங்களில் தமிழக அரசை எதிர்க்கட்சிகள் இணைந்து கடுமையாக விமர்சித்து வருகின்றன. மக்கள் விரோத அரசு, மக்களை கண்டுகொள்ளாத அரசு என்றெல்லாம் விமர்சித்து வருகின்றன. ஸ்டெர்லைட் விவகாரத்தில், ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் சல்ஃபர் டை ஆக்ஸைடு உள்ளிட்ட நச்சு வாயுக்களால் மக்கள் நோய்களுக்கு ஆளாவதோடு, சுற்றுச்சூழலும் பாதிப்படைகிறது என்பதால்தான் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தப்பட்டது.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டது, அரசுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது. துப்பாக்கிச்சூட்டிற்கு மக்கள் மத்தியில் அதிருப்தியும் ஆதங்கமும் நிலவுகிறது.
ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது என்று எதிர்ப்பு கிளம்பி, அந்த ஆலை மூடப்பட்ட நிலையில், அதே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து, மக்கள் நலனுக்கான அரசு என்பதை பறைசாற்ற முயல்கிறது தமிழக அரசு.
அதுவும் ஒட்டுமொத்தமாக பிளாஸ்டிக்கிற்கே தடை விதித்தால், அதுவும் எதிர்மறையான விமர்சனங்களை உருவாக்கும் என்பதால், மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களான பால், தயிர், எண்ணெய் மற்றும் மருந்து பொருட்களுக்கான உறைகள் ஆகியவற்றிற்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை தவிடுபொடியாக்கி மக்களுக்கான அரசுதான் என்பதை பறைசாற்றும் வகையில், இதேபோல மேலும் பல அறிவிப்புகளும் திட்டங்களும் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.